Published : 07 Jan 2025 11:25 AM
Last Updated : 07 Jan 2025 11:25 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கிறது

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் வெளியாகிறது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது.

புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு அங்குள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு அரசியல் களம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அங்கே கட்சித் தாவல்கள், காரசார வாக்குவாதங்கள் என அரசியல் களம் களை கட்டியுள்ள நிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் கடும் குளிருக்கு இடையேயும் அரசியல் களத்தில் அனல் பறக்கும்.

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது. மீண்டும் ஆட்சி அமைத்தாலே முதல்வராவேன் என்று சூளுரைத்து சுழன்று வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மியை வீழ்த்தி டெல்லியில் கால் ஊன்ற வேண்டும் என்று பாஜகவும் கடும் பிரயத்தனங்களை செய்து வருகிறது. காங்கிரஸ் எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறது. இத்தகைய சூழலில் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற அரசியல் களேபரங்கள் எல்லாம் நினைவுகூரத்தக்கவையே.

கேஜ்ரிவாலின் வாக்குறுதி! அந்த வகையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தண்ணீர் கட்டண ரசீதுகளை டெல்லி குடிநீர் வாரியம் மக்களுக்கு அனுப்பி உள்ளது. நான் சிறைக்குச் சென்ற பிறகே இது நிகழ்ந்தது. கூடுதல் கட்டணங்களை மக்கள் செலுத்த வேண்டாம்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். குடிநீர் கட்டண பில்களில் தவறு இருப்பதாக நினைப்பவர்கள் அவற்றை செலுத்த வேண்டியதில்லை. ஆம் ஆத்மி அரசாங்கம் மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்குகிறது. டெல்லி நகரத்தில் உள்ள 12 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.” எனக் கூறியிருந்தார்.

பாஜக பிரச்சாரம்: அதற்கு எதிரிவினையாற்றும் வகையில், “வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக பஞ்சாபை போன்று டெல்லியிலும் போலி வாக்குறுதிகளை கேஜ்ரிவால் அள்ளி வீசுகிறார். அவரை நம்பி ஏமாற வேண்டாம் என்று டெல்லி மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.” என்று பாஜக தீவிர பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்தச் சூழலில் தேர்தல் தேதி அறிவிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x