Last Updated : 07 Jan, 2025 03:19 AM

 

Published : 07 Jan 2025 03:19 AM
Last Updated : 07 Jan 2025 03:19 AM

சென்னை, பெங்களூரு, குஜராத்தில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு: நிபுணர்கள் சொல்வது என்ன?

பெங்களூரு/சென்னை: தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உட்பட நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான், அச்சப்படத் தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய புதிய தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக, கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் 2 ஹெச்எம்பிவி (HMPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள பேப்டிஸ்ட் மருத்துவமனையில் டிசம்பர் கடைசி வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு முதலில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. மூச்சுக்குழாய் நிமோனியா தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3-ம் தேதி சளி, காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு இதே வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் கண்டறியப்பட்ட குழந்தை குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு, கண்காணிக்கப்படுவதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘ஹெச்எம்பிவி வைரஸ் பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை நலமோடு வீடு திரும்பியுள்ளது. மற்றொரு குழந்தையும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பும். இந்த வைரஸ் புதிதாக கண்டறியப்பட்ட ஒன்று அல்ல. 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

இதற்கிடையே மூன்றாவது பாதிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தைக்கு இதே வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு, ஜனவரி 5-ம் தேதி ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 3 குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

எப்படி பரவுகிறது? - மத்திய சுகாதாரத்துறை விடுத்த செய்திக் குறிப்பில், ‘‘இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு தொண்டை வலி, சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. சிறு குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். வைரஸ் பரவியுள்ள இடங்களை தொட்டுவிட்டு பிறகு அப்படியே வாய், மூக்கு, கண்களை தொடும்போது இந்த வைரஸ் உடலில் பரவுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஹெச்எம்பிவி வைரஸால் தற்போது சென்னையில் ஒருவரும், சேலத்தில் ஒருவரும் என 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பயப்பட வேண்டாம்: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று ஆகும். இதைவிட இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டால்தான் கூடுதல் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதனால், சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் புதிதாக வந்தது இல்லை. இதை பெரிதுபடுத்தி கூறுவதும், அச்சுறுத்துவதும் தவறான செயல் ஆகும். பெரும்பாலான குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் பரவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனாலும், விழிப்புணர்வு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், இணை நோயாளிகள், எதிர்ப்பாற்றல் குறைப்பு சிகிச்சையில் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். இதன்மூலம் வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சாதாரண வைரஸ்தான்: தமிழக சுகாதாரத் துறை கூறியதாவது: ஹெச்எம்பிவி வைரஸ் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள சாதாரண வைரஸ் தொற்றுதான். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு வேண்டுமானால் நுரையீரலில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் உரிய சிகிச்சை பெற்றால் குணமடைந்துவிடலாம். பெரியவர்களுக்கோ, வளரிளம் பருவத்தினருக்கோ அது அச்சுறுத்தக் கூடிய பாதிப்பாக இருப்பதில்லை. இன்ஃப்ளூயன்சா, ஆர்எஸ்வி சுவாச தொற்றுகளை காட்டிலும் பலவீனமான நோயாகவே ஹெச்எம்பிவி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x