Published : 07 Jan 2025 02:28 AM
Last Updated : 07 Jan 2025 02:28 AM
புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பில், புதிய கல்விக் கொள்கை அமலானது. இதில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத்தின் காந்தி நகரில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக, ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் (Deakin University) சர்வதேச கிளையை தொடங்கியது.
குஜராத்தில் 2-வதாக ஆஸ்திரேலியாவின் உல்லாங்காங் பல்கலைக்கழக (Wollongong University) கிளை அமைக்கப்பட்டது. மூன்றாவதாக ஹரியானாவின் குருகிராமில் பிரிட்டனின் சவுத்தாம்டன் பல்கலைக்கழகம் (University of Southampton) கிளை அமைக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் (டபுள்யுஎஸ்யு), இந்தியாவில் தனது முதல் கிளையை அமைக்க உள்ளது. இது, உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் அமைகிறது. இதற்காக, அந்தப் பல்கலைக்கழகத்துடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே இங்கு மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
பாஜக முதல்வராக ஆதித்யநாத் பதவியேற்றது முதல், உ.பி.யில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நொய்டாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகக் கிளையும் அமைகிறது. முதல் கட்டமாக வர்த்தகக் கட்டிடத்தில் தொடங்கப்படும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலை. கிளை, பின்னர் கிரேட்டர் நொய்டாவில் 7 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டபுள்யுஎஸ்யுவின் துணை வேந்தர் பேராசிரியர் திபோரோ ஸ்வீனி உ.பி.யின் தலைமைச் செயலர் மனோஜ் குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் மனோஜ் குமார் கூறும்போது, “நாட்டில் உ.பி. அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. நொய்டா உட்பட உ.பி.யின் மேற்குப் பகுதி வேளாண்மை மற்றும் ஜிடிபியில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது. கிரேட்டர் நொய்டாவின் ஜேவரில் அமையும் சர்வதேச விமான நிலையத்தால் உ.பி.க்கு வெளிநாடுகளின் நேரடி தொடர்பும் கிடைக்கிறது. இதில் ஒன்றுதான் டபுள்யுஎஸ்யுவின் முதல் இந்தியக் கிளை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT