Published : 07 Jan 2025 01:47 AM
Last Updated : 07 Jan 2025 01:47 AM
உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங்கின் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கக் கோரி, பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், போராட்ட களத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் ஜெகஜித் சிங் படுத்தபடியே உரையாற்றினார். அப்போது அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டதால் சரியாக பேச முடியவில்லை என கூறப்படுகிறது. அப்போது அவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது உரையை முடித்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதைக் கேட்காமல் உரை நிகழ்த்தி உள்ளார்.
உரையை முடித்துக் கொண்ட பிறகு அவதார் சிங் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இதில், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெகஜித் சிங் மருந்து எடுத்துக் கொள்ள மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் அவர் முழுமையாக குணமடைய வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT