Published : 06 Jan 2025 07:19 PM
Last Updated : 06 Jan 2025 07:19 PM
புதுடெல்லி / பெங்களூரு: எச்.எம்.பி.வி (hMPV) எனப்படும் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் தொற்று காரணமாக கர்நாடகாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.எம்.ஆர்) கண்டறிந்துள்ளது.
நாடு முழுவதும் சுவாசப் பாதிப்பு நோய்களைக் கண்காணிப்பதற்கான ஐ.சி.எம்.ஆரின் தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க் கிருமிகளுக்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘எச்.எம்.பி.வி பாதிப்பு ஏற்கெனவே இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ளதாகவும், எச்.எம்.பி.வி உடன் தொடர்புடைய சுவாச நோய்கள் பாதிப்பு பல்வேறு நாடுகளில் பதிவாகியுள்ளன என்றும் கூறப்படுகின்றன. மேலும், ஐ.சி.எம்.ஆர் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (ஐ.டி.எஸ்.பி) கட்டமைப்பின் தற்போதைய தரவுகளின் அடிப்படையில், நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐ.எல்.ஐ) அல்லது கடுமையான சுவாச நோய் (எஸ்ஏஆர்ஐ) பாதிப்பு அதிகரிப்பு ஏதுமில்லை.
மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்புடன் பெங்களூருவின் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எச்.எம்.பி.வி நோயால் கண்டறியப்பட்ட 3 மாத பெண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது. மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்புடன் பெங்களூருவின் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஜனவரி 3-ம் தேதி அன்று எச்.எம்.பி.வி பாதிப்பு கண்டறியப்பட்ட 8 மாத ஆண் குழந்தை தற்போது குணமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருவரும் சர்வதேச பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமையை கண்காணித்து வருகிறது. ஐ.சி.எம்.ஆர் அமைப்பானது ஆண்டு முழுவதும் எச்.எம்.பி.வி போக்குகளை தொடர்ந்து கண்காணிக்கும். உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே சீனாவில் நிலவி வரும் நிலைமை குறித்த தகவல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட தயார் நிலை ஒத்திகை, சுவாச நோய்களில் எந்தவொரு சாத்தியமாகக்கூடிய அதிகரிப்பையும் கையாள இந்தியா நன்கு தயாராக உள்ளது என்பதையும், தேவைப்பட்டால் பொது சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக பயன்படுத்த முடியும் என்பதையும் காட்டுகிறது’ என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வாசிக்க > சீனாவில் பரவும் புதிய வைரஸ்: கரோனா அளவுக்கு அச்சம் தேவையா? - ஒரு தெளிவுப் பார்வை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT