Published : 14 Jul 2018 03:49 PM
Last Updated : 14 Jul 2018 03:49 PM

வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர்கள் ஏழுமலையானுக்கு ரூ.13.5 கோடி காணிக்கை

வெளிநாட்டில் வாழும் இந்திய பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கும், திருமலை தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மருத்துவம், அன்னதானம், கல்வி, கோசாலை உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறது. இதற்காக, உலகெங்கும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பெருமளவில் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும், சில பக்தர்கள் சாமிக்கு தங்கம், வெள்ளி, வாகனங்கள் போன்றவையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இது தவிர, திருமலையில் பக்தர்கள் தங்க, தனியார் நிறுவனங்கள் விடுதிகளையும் தேவஸ்தானத்திற்கு கட்டி தருகின்றனர். அன்னதானத்திற்கு காய்கறிகள், அரிசி, பருப்பு முதலிய பொருட்களையும், விதவிதமான மலர்களும் தினந்தோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குபவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலையில் அமெரிக்கா பாஸ்டன் நகரைச் சேர்ந்த ஆர்.எக்ஸ். அட்வான்ஸ் பார்மா நிறுவன சி.இ.ஓ ரவி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜேசிஜி டெக்னாலஜிஸ் நிறுவன சி.இ.ஓ ஸ்ரீநிவாஸ் எனும் 2 பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இதில் ரவி என்பவர் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மேலும் பல வசதிகளை செய்யக் கோரி, ரூ. 10 கோடியை உண்டியலில் செலுத்தினார்.

ஸ்ரீநிவாஸ் என்பவர் இலவச அன்னதான திட்டத்திற்கு ரூ.1 கோடி, திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் இலவச எலும்பு சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடி, சர்வ ஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி, கோசாலைக்கு ரூ. 10 லட்சம், கல்வி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், பக்தர்களுக்கு விடுதிகள் கட்டி தர ரூ. 20 என மொத்தம் இவர் ரூ.3.5 கோடிக்கான காசோலையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில தொழிற்சாலைத் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி, இயக்குநர் ராகவேந்திர ராவ் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x