Published : 06 Jan 2025 11:37 AM
Last Updated : 06 Jan 2025 11:37 AM
பெங்களூரு: பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இப்போதைக்கு இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் 8 மாத கைக்குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத் துறை வட்டாரம், ”8 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று ஏற்பட்டதாக தனியார் மருத்துவமனை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் நோய் கண்டறிவதற்கான ரத்த / சளி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படவில்லை. அதேவேளையில் தனியார் மருத்துவமனையின் சோதனை முடிவுகளை தாங்கள் சந்தேகிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவும் எச்எம்பிவி வைரஸ் பற்றிய முழுமையான தரவுகள் நமக்கு இல்லை. அதனால் இப்போது பரிசோதிக்கப்பட்ட மாதிரியை ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் மாதிரியானவையா என்று சொல்ல இயலவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்ஷ் குப்தா இது குறித்து கூறுகையில், “பொதுவாகவே 11 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை சோதித்தால் அதில் சுமார் 1 சதவீத சேம்பிள்களில் எச்எம்பிவி தொற்று உறுதியாகும். எனவே இது முதல் பாதிப்பாக இருக்க வேண்டிய் அவசியமில்லை. முன்னதாக சோதனைகள் செய்யப்படாததால் தெரியாமல் இருந்திருக்கலாம். எச்எம்பிவி தொற்றும் மற்ற சுவாசப்பாதை வைரஸ் தொற்றுகள் போன்றதே. அதனால் பீதி அடையத் தேவையில்லை. இது சிறுவர்கள், முதியவர்களுக்கு குளிர் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.” என்றார்.
முன்னதாக சனிக்கிழமை கர்நாடக சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகாவில் எச்எம்பிவி தொற்று பாதிப்பு இல்லை. மாநிலத்தில் நிலவும் சுவாசப் பாதை தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களை ஆராய்ந்ததில், டிசம்பர் 2024-ல் பதிவான இத்தகைய நோயர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கவனிக்கத்தக்க அளவுக்கு அதிகரிக்கவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், “சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவியுள்ளதாக வந்த தகவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று கடந்த 2001-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் கேரள ஆய்வகங்களில் உள்ளது. இந்த தொற்று குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை.” என்று கூறினார். மேலும் வாசிக்க>> சீனாவில் பரவும் புதிய வைரஸ்: கரோனா அளவுக்கு அச்சம் தேவையா? - ஒரு தெளிவுப் பார்வை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT