Published : 06 Jan 2025 05:23 AM
Last Updated : 06 Jan 2025 05:23 AM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 100 கி.மீ. முதல் 250 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தின் மீரட் நகரங்களுக்கு இடையிலான வழித்தடத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த வழித்தடத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் நமோ பாரத் விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது உத்தர பிரதேசத்தின் சாஹிபாபாத் முதல் மீரட் தெற்கு பகுதி வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சாஹிபாபாத்தில் இருந்து டெல்லியின் நியூ அசோக் நகர் வரை 13 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட வழித்தடத்தில் நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சாஹியாபாத்தில் இருந்து நியூஅசோக் நகர் வரை நமோ பாரத் ரயிலில் அவர் பயணம் செய்தார். அப்போது மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இதன்பிறகு டெல்லி ரோகினி பகுதியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.12,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். டெல்லி மெட்ரோ 4-ம் கட்ட திட்டத்தில் ஜனக்புரி மற்றும் கிருஷ்ணா பார்க் இடையிலான வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரிதாலா-குண்ட்லி இடையிலான புதிய மெட்ரோ வழித்தடத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
முதல்முறையாக நமோ பாரத் விரைவு ரயில் சேவையை டெல்லி பெற்றிருக்கிறது. இதன்மூலம் டெல்லி, உத்தர பிரதேச மக்கள் பலன் அடைவார்கள். டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டின் மெட்ரோ ரயில் சேவை 1,000 கி.மீ. ஆக அதிகரித்து இருக்கிறது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் பாரதம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் வசதி கொண்ட நாடுகளின் பட்டியலில் பாரதம் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது. விரைவில் 2-வது இடத்தை எட்டிப் பிடிப்போம். இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவில் சிகிச்சை பெறுவோம் உள்ளிட்ட திட்டங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
ஆம் ஆத்மி அரசு பேரழிவு சக்தி: பின்னர் டெல்லி ரோகினி ஜப்பானீஸ் பூங்கா பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பேரழிவு சக்தியாக செயல்படுகிறது. ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி நடத்தப்பட்ட ஜன் லோக்பால் போராட்டத்தின்போது ஆம் ஆத்மி கட்சி உதயமானது. ஆனால் அந்த கட்சி இப்போது முழுமையான ஊழல் கட்சியாக மாறியிருக்கிறது. ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுபான உரிமம் ஊழல், பள்ளி ஊழல், மருத்துவமனை ஊழல் என பல்வேறு ஊழல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துள்ளன.
டெல்லி மற்றும் டெல்லி மக்களின் வளர்ச்சியில் ஆம் ஆத்மிக்கு துளியும் அக்கறை கிடையாது. கோடை காலத்தில் டெல்லி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின்றன. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி மக்களால் சுத்தமான காற்றைகூட சுவாசிக்க முடியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி முழுவதும் பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இனிமேலும் ஆத் ஆத்மி அரசின் பேரழிவுகளை சகித்து கொள்ள மாட்டோம் என்று பொதுமக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அரசு அகற்றப்படும். டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும். இரட்டை இன்ஜின் அரசு மூலம் டெல்லி அதிவேகமாக முன்னேறும். மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
ஏழை மக்கள், மூத்த குடிமக்களின் நலன் கருதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் டெல்லி அரசு இந்த திட்டத்தை அமல்படுத்த மறுக்கிறது. இதனால் ஏழைகள், மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
அண்மையில் ஹரியானா, ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்தது. டெல்லி மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அடுத்து வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களின் கோபத்தால் அச்சமடைந்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், பொய்களை பரப்பி வருகின்றனர். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. வரும் தேர்தலில் ஊழல் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மெட்ரோ ரயில் சேவையில் 3-வது இடத்தில் இந்தியா: மெட்ரோ ரயில் சேவையில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் சுமார் 4,201 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் சுமார் 1,408 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. நமது நாட்டில் தற்போது 1,000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 23 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் புதிதாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 3 வழித்தடங்களில் 118 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் நிறைவு பெறும்போது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT