Published : 06 Jan 2025 03:19 AM
Last Updated : 06 Jan 2025 03:19 AM

தாவூத் இப்ராஹிமை கொல்வதை லட்சியமாக கொண்ட சப்னா தீதி இறந்தது எப்படி?

புதுடெல்லி: மும்பையில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அஸ்ரப் என்று அழைக்கப்பட்ட சப்னா தீதி. இவர் மெஹ்மூத் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது கணவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பிருப்பது அப்போது அவருக்கு தெரியாது.

மெஹ்மூத் கான் துபாய் சென்று திரும்பியபோது மும்பை ஏர்போர்ட்டில் வைத்து சப்னா கண் முன்பாகவே கூலிப்படை அவரை சுட்டுக் கொன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சப்னா தனது கணவரின் சாவுக்கு யார் காரணம் என்பதை தேடி அலைந்தார்.

அப்போதுதான் தெரிந்தது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தான் தனது கணவரின் மரணத்துக்கு காரணம் என்பது. தன் உத்தரவை நிறைவேற்றாத மெஹ்மூத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் தாவூத்.

இந்த உண்மையை அறிந்த பிறகு சப்னா, தாவூத் இப்ராஹிமை பலி வாங்குவதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டார். இதற்காக, தாவூத் இப்ராஹிமின் பரம எதிரியான ஹுசைன் உஸ்தாராவுடன் இணைந்து செயல்பட்டார். துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைப் பெற்ற பிறகு மும்பையில் பெண் கேங்ஸ்டராக சப்னா உருவெடுத்தார். தாவூத் தொழில் செய்வதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினார்.

தாவூத்தை பலி வாங்க கண்கொத்தி பாம்பாக காத்திருந்த சப்னாவுக்கு 1990-ல் ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்த போட்டியை காண தாவூத் வருவார் என்பதை அறிந்த சப்னா ஆயிரக்கணக்கானோர் கண்முன்னால் அவரை தீர்த்து கட்ட தனது ஆட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த திட்டம் தாவூத் கூட்டத்துக்கு முன்னரே தெரிந்துவிட்டது.

சப்னா கூட்டத்துக்குள்… அதன்பின்னர், தாவூத்தின் ஆட்கள் சப்னா கூட்டத்துக்குள் ஊடுருவி கடந்த 1994-ம் ஆண்டு வீட்டிலேயே வைத்து அவரை தீர்த்து கட்டினர். சப்னாவின் உடம்பில் 22 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டும் அருகில் இருந்தவர்கள் தாவூதின் மேல் உள்ள பயத்தின் காரணமாக யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இன்று சப்னா தீதி மற்றும் அவரது துணிச்சலான செயல்பாடு குறித்து ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவரின் புகைப்படங்களும் யாருக்கும் கிடைக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x