Published : 06 Jan 2025 02:11 AM
Last Updated : 06 Jan 2025 02:11 AM

கூட்டணிக்கான லாலுவின் அழைப்பை நிராகரித்தார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: பிஹார் மாநிலத்தில் முன்பு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மெகா கூட்டணியில் அங்கம் வகித்தது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் லாலு பிரசாத் பேசுகையில் "கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், முந்தைய கசப்பு உணர்வுகளை மறந்து நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இணைய வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.

முசாபர்பூரில் ரூ. 450 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது நிதிஷ் குமாரிடம், கூட்டணிக்கு லாலு அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

அவர்களுடன் (லாலு பிரசாத்) நான் ஏற்கெனவே இரண்டு முறை கூட்டணி அமைத்து தவறிழைத்து விட்டேன். மீண்டும் அதேபோன்ற தவறை செய்யமாட்டேன்.

நமக்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு ஏதாவது செய்தார்களா? சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். அப்போதைய ஆட்சியின்போது தவறுதலாக இரண்டு முறை அவர்களுடன் கூட்டு சேர்ந்துவிட்டேன். மீண்டும் அதுபோன்று நடக்காது.

அப்போது பெண்களின் நிலை எப்படி இருந்தது? இப்போது நமது சுய உதவி குழுக்கள் திட்டத்தை மத்திய அரசு நகலெடுக்கிறது. இவ்வளவு நம்பிக்கையான கிராமப்புற பெண்களை நீங்கள் இதற்கு முன்பு பார்த்தது உண்டா? இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x