Published : 05 Jan 2025 06:52 PM
Last Updated : 05 Jan 2025 06:52 PM
புதுடெல்லி: டெல்லி அரசினை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்லில் வாக்கு கேட்கிறது என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட டெல்லி உள்கட்டமைப்புக்கான இரண்டு மைல்கல் திட்டங்கள் மத்திய அரசு மற்றும் டெல்லி நகர நிர்வாகத்தின் கூட்டு முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், " ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கலகம் மட்டுமே செய்கிறது என்று கூறுபவர்களுக்கான பதிலே இன்றையத் திட்டங்களின் திறப்பு விழாக்கள். அவர்கள் எங்களின் தலைவர்களை சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் எங்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களை நாங்கள் பிரச்சினையாக்கவில்லை. நாங்கள் மக்களுக்காக உழைத்தோம். இல்லையென்றால் இந்தத் திட்டங்கள் வந்திருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எவ்வாறு எங்களின் பணிகளை முடித்தோம் என்பதற்கு எங்களின் கடந்த பத்து ஆண்டுகால செயல்பாடுகளே ஆதாரம். இன்று பிரதமர் மோடி 38 நிமிடங்கள் பேசினார். அதில் 29 நிமிடங்கள் டெல்லி மக்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினையும் துஷ்பிரயோகம் செய்தார். நானும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அதுமிகவும் மோசமாக இருந்தது. கடந்த 2020 தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி - அது நிறைவேறும் என்று டெல்லி தேஹாத் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
டெல்லி தேர்தலுக்கான பிரதமர் மோடியின் ஒரு கொள்கை ஆம் ஆத்மி அரசை துஷ்பிரயோகம் செய்வதே. பிரதமர் மோடி தினமும் டெல்லி மக்களை துஷ்பிரயோகம் செய்கிறார். அவர்களை அவமதிக்கிறார். தேர்தலில் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.
டெல்லி - மீரட் ஆர்ஆர்டிஎஸ் (Regional Rapid Transit System) வழித்தடத்தில் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்திலிருந்து டெல்லியின் அசோக் நகர்வரையிலான 13 கி.மீ., வரையிலான பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதேபோல், டெல்லி மெட்ரோவின் நான்காவது கட்டத்தின் மேற்கு ஜானகிபுரி - கிருஷ்ணா பார்க் விரிவாக்கத்தையும் திறந்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT