Published : 05 Jan 2025 05:57 PM
Last Updated : 05 Jan 2025 05:57 PM

‘‘பிரியங்காவின் கன்னத்தை போல சாலைகள் இருக்கும்’’ - பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் வாக்குறுதிக்கு காங்., கண்டனம்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல வழவழப்பானதாக ஆக்குவேன் என்று கல்காஜி தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி கூறியது சர்ச்சையாகியுள்ளது.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் எம்பியும், பாஜக வேட்பாளருமான ரமேஷ் பிதுரி, "பிஹாரின் சாலைகளை ஹேமா மாலினியின் கன்னங்கள் போல சீராக மாற்றுவேன் என்று லாலு பிரசாத் யாதவ் ஒருமுறை சொன்னார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், ஒக்லா மற்றும் சங்கம் விகாரின் சாலைகளை மாற்றியது போல, கல்காஜியின் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல வழவழப்பாக்குவோம்" என்று தெரிவித்திருந்தார்.

பிதுரியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "பாஜக எப்போதும் பெண்களுக்கு எதிரான கட்சி. பிரியங்கா காந்தி குறித்த அக்கட்சியின் ரமேஷ் பிதுரியின் கருத்து கேவலமானது மட்டும் இல்லை, அவரது கேவலமான மனநிலையையும் குறிக்கிறது. தனது சக எம்பியை நாடாளுமன்றத்தில் கேவலப்படுத்தி விட்டு தண்டனையின்றி தப்பித்த ஒருவரிடம் இருந்து வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பாஜக தலைவர் பிரியங்கா காந்தியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுப்ரியா வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா இதே கருத்துக்களை பிரதிபலித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த திமிரான கருத்து அவரது (ரமேஷ் பிதுரி) மனநிலையை மட்டும் காட்டவில்லை. அது அவர்களின் உண்மையான தலைவர்களின் உண்மை முகத்தைக் காட்டுகிறது. பாஜகவில் மேலிருந்து கீழ் வரையுள்ள இதுபோன்ற குட்டித் தலைவர்களிடம் ஆர்எஸ்எஸின் மதிப்புகளைக் காணலாம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கண்டனம்: ரமேஷ் பிதுரியின் கருத்துக்கு இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்பி சஞ்சய் சிங், "இது மிகவும் கேவலமானது. நாடாளுமன்றத்தில் அவதூறு வார்த்தைகளில் பேசியவருக்கும், வாக்களர்களுக்கு வெளிப்படையாக பணம் கொடுத்தவர்களுக்கும் பாஜக தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் மீதான இத்தகைய மலினமான மற்றும் கேவலமான கருத்து துரதிருஷ்டவசமானது. பாஜகவின் ஆட்சியில் பெண்களுக்கு எத்தகைய பாதுகாப்பு இருக்கும் என்று டெல்லி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ரமேஷ் பிதுரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பிரச்சினைக்குள்ளாவது இது முதல் முறை இல்லை. கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அப்போதைய பிஎஸ்பி எம்.பி, டேனிஷ் அலிக்கு எதிராக வகுப்புவாத கருத்துக்களை ரமேஷ் பிதுரி தெரிவித்திருந்தார். அவரது அந்த கருத்து பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கண்டனங்களுக்குள்ளானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x