Published : 05 Jan 2025 02:22 PM
Last Updated : 05 Jan 2025 02:22 PM
புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்க விருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையே சமூக வலைதளங்களில் புதிய மோதல் உருவாகியுள்ளது. பாஜகவுக்கு முதல்வர் முகமில்லை என ஆம் ஆத்மி கேலி செய்ய, பேரழிவு என்று பாஜக எதிர்வினையாற்றியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி அதன் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜானவாச குடையுடன் மாப்பிள்ளை அழைப்புக்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் மாப்பிள்ளை இல்லாத நிலையில் வலம் வருகிறது. இதனுடன், பாஜக-காரர்களே உங்களுடைய மாப்பிள்ளை யார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் இந்த கேலிக்கு, அக்கட்சித் தலைமையிலான ஆட்சி டெல்லியின் பேரழிவு என்று பாஜக பதிலடி கொடுத்து எதிர்வினையாற்றியுள்ளது. டெல்லி பாஜகவின் எக்ஸ் தள பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சி வெளியேறும், பாஜக ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் அசோக் விஹாரில் வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு ஊழலில் திளைப்பதாகவும், அவர்கள் டெல்லியின் பேரழிவாக மாறிவிட்டதாகவும் தாக்கியிருந்தார். பிரதமர் கூறுகையில், "அவர்கள் மதுபானத்தில் ஊழல் செய்தார்கள், பள்ளிகளில், சுற்றுச்சூழல் மாசுவில் ஊழல் செய்தார்கள். அவர்கள் வெளிப்படையாக ஊழல் செய்துவிட்டு அதனை விளம்பரமும் செய்கிறார்கள். டெல்லிக்கு இது பேரழிவாகும். இந்தப் பேரழிவுக்கு எதிராக டெல்லிவாசிகள் போரினை அறிவித்துள்ளனர்" என்று பேசினார்.
பிரதமரின் இந்த குற்றசாட்டுக்கு டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார். அவர் டெல்லியில் பேரழிவு இல்லை. அது பாஜக கட்சிக்குள்ளேயே இருக்கிறது. முதல் பேரழிவு அந்தக் கட்சிக்கு முதல்வர் முகம் இல்லை, இரண்டாவது அவர்களிடம் சொல்வதற்கு விஷயங்கள் இல்லை. மூன்றாவது டெல்லிக்கான கொள்கைகள் பாஜகவிடம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைக்குப் பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் டெல்லி மக்கள் தனது நேர்மைக்கு நற்சான்று அளிப்பார்கள் என்றும், அதன் பின்பே முதல்வர் பதவியில் அமருவேன் என்றும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, டெல்லியின் அடுத்த முதல்வராக அதிஷி இருந்து வருகிறார்.
70 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட டெல்லி யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசின் பதவி காலம் பிப்.23ம் தேதியுடன் நிறைவடைகிறது. என்றாலும் தேர்தல் ஆணையம் இன்னும் டெல்லி பேரவைக்கு தேர்தல் தேதியினை அறிவிக்கவில்லை.
கடந்த 2015, 2020 பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி முறையே, 67, 62 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. பாஜக இரண்டு தேர்தல்களிலும் தலா மூன்று மற்றும் எட்டு என ஒற்றை இலக்கங்களிலேயே வெற்றி பெற்றது. மேலும் கடந்த 1998ம் ஆண்டு முதல் பாஜக டெல்லியில் ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BJP वालों, तुम्हारा दूल्हा कौन है pic.twitter.com/yHJCwKY4hb
— AAP (@AamAadmiParty) January 5, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT