Published : 05 Jan 2025 01:02 PM
Last Updated : 05 Jan 2025 01:02 PM

டெல்லி பனி மூட்டம்: 9 மணி நேர காட்சித்தெளிவின்மையால் 400 விமானங்கள், 81 ரயில்களின் சேவை பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியில் சுமார் ஒன்பது மணிநேரத்துக்கு அடர் பனி நீடித்தது. இந்த ஆண்டின் பனி காலத்தின் மிக நீண்ட பனி தொடர்பான இடையூறு இது. டெல்லியின் பாலத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம், எதிரில் இருப்பவர்கள் தெரியாதபடி பனிமூட்டம் நீடித்தது. நகரத்தின் பிரதானமான வானிலை நிலையமான சஃப்தர்ஜங், எட்டு மணி நேரம் காட்சித் தெளிவின்மை நீடித்ததாக பதிவு செய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கடுமையான பனி மூட்டம் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகளில் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டது. 81 ரயில்கள் தாமதமாக சென்றன, அவைகளில் சில எட்டு மணிநேரம் தாமதத்தில் சென்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், அடர் பனி மூட்டம் காரணமாக, அதிகாலை 12.15 முதல் 1.30 வரை 13 உள்ளூர் விமானங்கள், நான்கு சர்வதேச விமானங்கள், இரண்டு திட்டமிடப்படாத விமானங்கள் என 19 விமானங்கள் திசைதிருப்பிவிடப்பட்டதாக டெல்லி சர்வதேச விமானநிலைய இயக்கத்துக்கு பொறுப்பான IGIA பதிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், மோசமான வானிலை காரணமாக 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று விமானநிலைய அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். மேலும் 400 விமானங்கள் தாமத்தை எதிர்கொண்டன. என்றாலும் CAT III உடன் இணக்கமான விமானங்கள், குறைந்த கட்சி தெளிவு நிலையிலும் இயங்க அனுமதிக்கப்பட்டன.

மோசமான காற்று தரம்: இந்த அடர் மூடு பனிநிலை காற்றின் தரம் தீவிரமடைவதற்கு வழிவகுத்தது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக்குறியீடு 378 ஆக பதிவாகி, மிகவும் மோசம் என்ற நிலையிலேயே நீடித்தது. இதேபோல், பஞ்சாப், ஹரியானாவின் பல பகுதிகள் கடந்த சில நாட்களாக அடர் மூடு பனி நிலையை அனுபவித்து வருகின்றன. அமிர்தசரஸ், லுதியானா, பட்டியாலா, அம்பாலா, ஹிசார் மற்றும் கர்னால் உள்ளிட்ட பல பகுதிகளில் எதிரிலிருப்பவர்கள் தெரியாத அளவுக்கு நேற்று பனி அடர்ந்து காணப்பட்டது. சண்டிகரிலும் காலை நேரத்தில் பனி போர்வை போல் சூழ்ந்து காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x