Published : 05 Jan 2025 02:53 AM
Last Updated : 05 Jan 2025 02:53 AM
புதுடெல்லி: “வயதான காலத்தில் பிள்ளைகள்கவனிக்காவிட்டால், பெற்றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து, மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும். அந்த சொத்துகளுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ம.பி. உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், “வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற காரணத்துக்காக தான பத்திரத்தை (தான செட்டில்மென்ட்) ரத்து செய்ய முடியாது. மேலும், பிள்ளைகள் கவனிக்காவிட்டால், தானப் பத்திரம் செல்லாது என்று எந்த நிபந்தனையையும் மனுதாரர் விதிக்கவில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: ம.பி. உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் “பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்”படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்கலாம்.
இந்தச் சட்டம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்படும் மூத்த குடிமக்கள் விஷயத்தில் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதைவிட, அதில் தளர்வுகள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT