Published : 05 Jan 2025 01:59 AM
Last Updated : 05 Jan 2025 01:59 AM
மகாராஷ்டிராவில் தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின குக்கிராமம் ஒன்றில் இருக்கும் பள்ளி ஆண்டின் 365 நாட்களும் செயல்பட்டு மாணவர்களுக்கு நேரடி பயிற்சியுடன் கூடிய கல்வியை கற்று தந்து வருகிறது. இதனை, மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் டாடா பூஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.
திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகள் புத்தகப் புழுக்கள் அல்ல. அவர்கள் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வெல்டிங், மின்சார வேலை மற்றும் இயற்கை விவசாயம் போன்றவற்றை நேரடியாக பயின்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
ஆண்டின் 365 நாளும் இயங்கும் இப்பள்ளியில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வகுப்புகள் நடைபெறுகின்றன. எழுத்துப் பயிற்சி வழங்குதல், வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்தல் என இங்குள்ள மாணவர்கள் தினமும் தங்களது கற்றல் திறனை மேம்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், இந்த பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கல்வி அமைச்சர் டாடா பூஸ் அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடி அவர்களின் அறிவுத் திறனை கண்டு பாராட்டினார். இரு கைகளாலும் எழுதக்கூடிய சிலரின் திறமையைக் கண்டு மிகவும் வியப்படைந்தார்.
ஜில்லா பரிஷத் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றும் கேசவ் கவித்தின் புதுமையான முயற்சிகளால்தான் இந்த பள்ளியில் பெரும்பாலான சாதனைகளை சாத்தியமாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ கற்றல் மீதான இந்த அசாதாரணமான அர்ப்பணிப்பு குழந்தைகளிடையே பள்ளி படிப்பின் மீது ஆழமான அன்பை வளர்ப்பது மட்டுமல்லாமல் கல்வித் திறன்களையும் வளர்த்துள்ளது. ஆங்கிலம் பேசுதல், பொது அறிவு, கலைகளுக்கு முக்கியத்துவம், இயற்கை காய்கறிகளை பயிரிடுவது என விரிவான கல்வி மாதிரி இங்குள்ள மாணவர்களிடத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT