Published : 04 Jan 2025 05:51 PM
Last Updated : 04 Jan 2025 05:51 PM
புதுடெல்லி: மக்கள் பணத்தில் டெல்லியில் ரூ.45 கோடி செலவில் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்காக மாளிகை கட்டியுள்ளார் என்றும், அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பெண்களுக்கான சுஷ்மா விடுதி திறப்பு விழாவில் பேசிய அமித் ஷா, "பாஜகவின் சிறந்த தலைவராக சுஷ்மா எப்போதும் நினைவுகூரப்படுவார். தேசிய ஜனநாயாகக் கூட்டணியின் முதல் மற்றும் இரண்டாம் அரசாங்கங்களில் முக்கிய துறைகளின் அமைச்சராக அவர் இருந்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயக வரலாறு சுஷ்மாவை, வெளியுறவு அமைச்சராகவோ, சுகாதாரத் துறை அமைச்சராகவோ நினைவில் கொள்ளாது. மாறாக, எதிர்கட்சியின் போராட்டத் தலைவராகவே நினைவு கொள்ளும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் இரண்டாவது முறையாக அமைந்த அரசின் ரூ.12 லட்சம் கோடி ஊழலை நாடாளுமன்ற வளாகத்தில் அம்பலப்படுத்தியவர் சுஷ்மா. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எவ்வளவு முக்கியமானது என்பதற்கு உதாரணமாக சுஷ்மா ஸ்வராஜ் நினைவுகூரப்படுவார்.
சில குழந்தைகள் என் வீட்டுக்கு என்னைச் சந்திக்க வந்திருந்தனர். நான் அவர்களிடம் கேஜ்ரிவால் என்ன செய்தார் என்று கேட்டேன். அவர் தனக்காக ரூ.45 கோடி மதிப்பில் பெரிய கண்ணாடி மாளிகையை கட்டியதாக ஒரு குழந்தை கூறியது. அரசின் கார்களை பயன்படுத்த மாட்டோம், அரசு பங்களாவை பயன்படுத்த மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். இன்று தங்களுக்காக 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.45 கோடி மதிப்பில் கண்ணாடி மாளிகையை கட்டிக்கொண்டுள்ளனர். இதற்காக, கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
டெல்லியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த கேஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கிடைத்ததும், அவர் சொந்தக் கட்டிடம் கட்டத் தொடங்கினார். டெல்லியின் உள்கட்டமைப்பு பற்றி கவலைப்படவில்லை. மதுபான ஊழல், மொஹல்லா கிளினிக் பெயரில் ஊழல், மருந்து பெயரில் ஊழல், சிசிடிவி பெயரில் ஊழல், பஸ் கொள்முதலில் ஊழல் என கேஜ்ரிவால் டெல்லியில் ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இப்போது மக்களுக்கு நீதி வேண்டும். டெல்லி மக்களுக்கு கேஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT