Published : 04 Jan 2025 05:31 PM
Last Updated : 04 Jan 2025 05:31 PM

லடாக்கில் 2 மாவட்டங்கள், மெகா அணை: சீனா திட்டம் மீதான இந்திய எதிர்வினையில் காங். அதிருப்தி

காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் பவன் கெரா.

புதுடெல்லி: லடாக்கில் 2 மாவட்டங்களை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா தெரிவித்திருக்கும் ஆட்சேபனை போதுமானது அல்ல என்றும், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் பவன் கெரா, "ஹொட்டான் மாகாணத்தில் சீனா இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கும் வெளிப்படையான ஆட்சேபனை போதுமானது அல்ல. 2020 ஜூன் 20 அன்று நமது பிராந்தியத்தில் நிகழ்ந்த சீன ஊடுருவலுக்குப் பிறகு பிரதமர் வழங்கிய நற்சான்றிதழ் (clean chit) காரணமாகவே, சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இப்போது சீனா ஹோட்டான் மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், அந்தப் பகுதி பாரம்பரியமாகவும், வரலாற்று ரீதியாகவும் நம்முடையது. இந்த பகுதி மீதான நமது உரிமைகோரலில் காங்கிரஸ் மிகவும் உறுதியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கும் ஆட்சேபனை வேலை செய்யாது. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நமது நலன்களுக்கு விரோதமான அண்டை நாடுகளுக்கு நற்சான்றிதழ் வழங்கக் கூடாது என்பதை பிரதமர் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்தும் பவன் கெரா கவலை தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் வடகிழக்கு பிராந்தியத்தில் நமது நலன்களை சீர்குலைத்து அழிவை ஏற்படுத்தும். இது மிக மோசமான எதிர்வினையை நமது வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "சீனாவின் ஹோட்டான் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை நாங்கள் பார்த்தோம். இவற்றின் அதிகார வரம்புகள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் அடங்கும். சீனாவின் இத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை.

புதிய மாவட்டங்களை உருவாக்குவது அப்பகுதி மீதான நமது இறையாண்மை தொடர்பான இந்தியாவின் நீண்டகால மற்றும் உறுதியான நிலைப்பாட்டை பாதிக்காது. அதோடு, சீனாவின் சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காது. இவ்விவகாரம் தொடர்பாக தூதரக ரீதியாக சீனத் தரப்பிடம் கடுமையான எதிர்ப்பை நாங்கள் தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு என்ன? - உலகின் மிக நீளமான நதிகளில் பிரம்மபுத்திரா 15-வது இடத்திலும் அதிக தண்ணீர் பாயும் நதிகளின் பட்டியலில் 9-வது இடத்திலும் இருக்கிறது. இந்த நதியின் மொத்த நீளம் 2,880 கி.மீ. ஆகும். சீனாவின் திபெத் பகுதியில் 1,625 கி.மீ., இந்தியாவில் 918, வங்கதேசத்தில் 337 கி.மீ. தொலைவு பிரம்மபுத்திரா பாய்கிறது. சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் பெயர் யார்லங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியில் புதிய அணையை கட்ட சீன அரசு மிக நீண்ட காலமாக திட்டமிட்டு இருந்தது. தற்போது யார்லங் சாங்போ நதியில் ரூ.12 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த அணையில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு மிகப் பெரிய அணையை கட்டுவது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. ‘திபெத்தில் உற்பத்தியாகும் மேக்கொங் ஆற்றில் சீன அரசு ஏற்கெனவே பல அணைகளை கட்டி வைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அணைகளில் சீன அரசு அளவுக்கு அதிகமாக தண்ணீரை தேக்கியது. இதனால் மேக்கொங் ஆறு பாயும் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளில் ஆறு வறண்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அந்த நாடுகளில் மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டது.

பிரம்மபுத்திரா நதியின் மூலம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வளம் அடைந்து வருகின்றன. சீனா கட்டும் புதிய அணையால் இந்திய மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படக்கூடும். இமயமலை பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனா அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அணையில் உடைப்பு ஏற்பட்டால் மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.

இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே பதற்றம் ஏற்படும்போது அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்துவிட்டு இந்திய பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. ஏற்கெனவே கங்கை நதியின் நீர்வரத்தை கட்டுப்படுத்தும் வகையில் திபெத்தின் மப்ஜா சாங்போ நதியில் புதிய அணையை சீன அரசு கட்டி வருகிறது. இந்த அணை உத்தராகண்ட் மாநில எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் இரு பிரதான அணைகளின் நீர்வரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x