Published : 04 Jan 2025 04:19 PM
Last Updated : 04 Jan 2025 04:19 PM
பிஜப்பூர்: சத்தீஸ்கரில் சாலை அமைப்பதில் நடந்த ஊழல் குறித்த செய்தி வெளியான நிலையில், அதன் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டு வளாகத்தினுள் பத்திரிகையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகேஷ் சந்த்ரகர் என்கிற 28 வயதான அந்த இளைஞர் உள்ளூர் ஊடகம் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வந்தார்.
சாலை போடுவதில் நடந்த ரூ.120 கோடி மதிப்பிலான ஊழலை அம்பலப்படுத்திய அவர் ஜன.3-ம் தேதி பிஜப்பூரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 1-ம் தேதி முதல் காணமல் போன முகேஷ், சமீபத்தில் சுரேஷ் சந்த்ரகர் என்ற ஒப்பந்ததாரருக்கு எதிராக விசாரணை நடத்தி பஸ்தரில் சாலை அமைப்பதில் நடைபெற்ற ரூ.120 கோடி முறைகேட்டை அம்பலப்படுத்தியிருந்தார். அந்த செய்தி ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்த்ரகரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அரசினைத் தூண்டியது.
இந்தநிலையில் முகேஷின் மூத்த சகோதரர் யுகேஷ் சந்த்ரகர், ஒப்பந்ததாரர் சுரேஷுக்கு சொந்தமான இடத்தில் அவரது சகோதரரை சந்திக்க சென்ற முகேஷ், அதன் பின்பு காணாமல் போய்விட்டார், அவரது மொபைல் போன் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, ஜன.3-ம் தேதி வெள்ளிக்கிழமை சட்டன்பாராவில் உள்ள சுரேஷ் சந்த்ரகருக்கு சொந்தமான வீடு ஒன்றின் கழிவு நீர் தொட்டியில் இருந்து முகேஷின் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், “உயிரிழந்தவரின் சகோதரர் தனது தம்பியை ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம். சிசிடிவி வீடியோ காட்சிகளையும், முகேஷ் கடைசியாக இருந்த இடங்களையும் ஆராய்ந்தோம். வெள்ளிக்கிழமை மாலையில் முகேஷின் சடலத்தை கழிவுநீர் தொட்டியில் இருந்து கண்டெடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
போலீஸார் மேலும் கூறுகையில், “இதுதொடர்பாக சுரேஷ் சந்த்ரகரின் சகோதரர்கள், தினேஷ் சந்த்ரகர் மற்றும் ரிதேஷ் சந்த்ரகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ் தலைமறைவாக உள்ளார். ஒப்பந்ததாரரின் வட்டாரங்களுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தனர்.
முகேஷின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், அது இதழியல் மற்றும் சமூகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிஜப்பூரின் இளம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட பத்திரிகையாளர் முகேஷ் சந்த்ரகரின் கொலை செய்தி மிகவும் துயரமாது. மன வருத்தத்தை தந்தது. எந்தச் சூழ்நிலையிலும் குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே முகேஷின் கொலைக்கு, தி எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தீஸ்கரின் இளம் சுயாதீன பத்திரிகையாளர் முகேஷ் சந்த்ரகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. சமீபத்தில் அவர் ஒரு சாலை ஊழல் தொடர்பான செய்தியினை வெளியிட்டிருந்தார். அது சில ஒப்பந்ததாரர்கள் குறித்த விசாரணைக்கு வழிவகுத்திருக்கிறது. இளம் பத்திரிகையாளரின் மரணம் மிகவும் கவலையளிக்கிறது.
பத்திரிகையாளர்கள் அதிலும் குறிப்பாக சிறிய நகரங்கள் அல்லது கிராமப் பகுதிகளில் இருந்து பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு எந்த தீங்கு அல்லது அச்சுறுத்தல் ஏற்படாதவாறு நாட்டிலுள்ள அனைத்து அதிகாரிகளும் தங்களால் முடிந்தவற்றை செய்யுமாறு எடிட்டர்ஸ் கில்டு கேட்டுக்கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த வட்டாரங்கள், அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு செல்வாக்கினையும், பணத்தினையும் பயன்படுத்தும் சுரேஷ் சந்த்ரகரின் செயல்முறை மிகவும் இழிவானது, எதிர்ப்புக் குரல்களை அவர் மிரட்டல் அல்லது வன்முறை மூலம் ஒடுக்கி வருகிறார். இந்தப் பகுதியில் ஊழல்களை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளைச் சந்திக்கின்றனர் எனத் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT