Published : 04 Jan 2025 03:01 AM
Last Updated : 04 Jan 2025 03:01 AM
மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக வந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வரும் ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உ.பி.யில் உங்கள் அரசால் மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்டால் இதுவும் சட்டத்திற்கு எதிரானது. இந்த நிகழ்வு மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதற்றத்தை உருவாக்கி விடும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.
மகா கும்பமேளா என்பது ஒரு ஆன்மீக நிகழ்வு. இது அமைதியான முறையில் நடைபெற்று முடிய வேண்டும். இந்த நிகழ்வின் மூலம் வெளியாகும் செய்தியால் நாட்டில் சமூகங்கள் இடையே ஒற்றுமை நிலவ வேண்டுமே தவிர வேற்றுமை அல்ல. இங்கு மதமாற்றம் செய்யப்பட்டால் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் பலனடைந்து, விமர்சிக்கும் வாய்ப்பு கிடைத்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பரேலி உலாமாவாகவும் இருக்கும் ரிஜ்வீ, அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறுவதால் உ.பி.யில் பிரபலமானவர். முஸ்லிம்கள் பின்பற்றும் ஷரீயத் சட்டத்தை ஆராய்ந்து ஃபத்வாக்களையும் வெளியிடுபவர். கடந்த வாரம் இவர், "முஸ்லிம்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவது தவறு. அது பெரும் பாவம்" என்று ஃபத்வா எனும் சட்டவிளக்கம் அளித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT