Published : 04 Jan 2025 02:57 AM
Last Updated : 04 Jan 2025 02:57 AM
திரையரங்கு நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றம் நேற்று ரெகுலர் ஜாமீன் வழங்கியது.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சிக்கு படத்தின் கதாநாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். இவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்கு உரிமையாளர், மேலாளர் ஆகிய மூவரும் கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தெலங்கானா உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால் அல்லு அர்ஜுன் மறுநாள் விடுவிக்கப்பட்டார். இவரது இடைக்கால ஜாமீன் ஜனவரி 10-ல் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் ரெகுலர் ஜாமீன் கோரிய வழக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பண பலத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு, போலீஸ் விசாரணை மற்றும் வழக்கில் அல்லு அர்ஜுன் தரப்பில் எவ்வித இடையூறும் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அல்லு அர்ஜுனக்கு நீதிமன்றம் ரெகுலர் ஜாமீன் வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT