Published : 03 Jan 2025 02:02 PM
Last Updated : 03 Jan 2025 02:02 PM

மணிப்பூரின் அமைதியை விரும்பாதவர்களே நான் மன்னிப்பு கேட்டதை அரசியலாக்குகிறார்கள் : முதல்வர் பிரேன் சிங்

இம்பால்: மணிப்பூர் இனக்கலவரம் விஷயத்தில் நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்குபவர்கள், மணிப்பூரின் அமைதிய விரும்பாதவர்கள் என்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

“மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்குபவர்கள், மாநிலம் அமைதியின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு எந்த கொள்கையும் இல்லை. எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் ஆகியோரிடமே நான் மன்னிப்பு கோரினேன். பயங்கரவாதிகளிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் மன்னிப்பு கோரியது அப்பாவி மக்களிடமே" என பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேன் சிங், “கடந்த ஆண்டு மே மாதம் 3 முதல் இன்று வரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் நான் வருந்துகிறேன். இந்த ஆண்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே இந்த விஷயத்துக்காக வருத்தப்படுகிறேன். அதோடு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடந்தது நடந்துவிட்டது. இனி இப்பிரச்சினைக்கு சமூகங்கள் இணைந்து தீர்வு காண வேண்டும். அமைதிக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

கடந்த மூன்று, நான்கு மாதங்களில் இம்மாநிலம் அமைதியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் 2025-ஆம் ஆண்டுக்குள் மணிப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன். இதுவரை ஏறத்தாழ 200 பேர் இறந்துள்ளனர். சுமார் 12,247 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 625 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிபொருட்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை கையாள்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்மோதலில், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர போதுமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது” என தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும், அதையொட்டிய மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது இனக் கலவரமாக மாறியதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக அங்கு வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x