Published : 03 Jan 2025 12:56 PM
Last Updated : 03 Jan 2025 12:56 PM
புதுடெல்லி: மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லாவும், ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டியும் இன்று (ஜன. 03) பதவியேற்றுக்கொண்டனர்.
அஜய் குமார் பல்லா பதவியேற்பு: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிப்பூரின் 19வது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா பதவியேற்றார். அவருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் பவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பை அடுத்து, மணிப்பூர் ரைபிள்ஸ் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார்.
நீண்ட காலம் மத்திய உள்துறை செயலாளராக இருந்தவர் அரிய பெருமையைப் பெற்ற அஜய் குமார் பல்லா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார். அசாம் - மேகாலயா கேடரின் 1984-பேட்ச் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அவரை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த மாதம் மணிப்பூர் ஆளுநராக நியமித்தார்.
அசாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில், அம்மாநிலத்தின் ஆளுநராக அஜய் குமார் பல்லா பொறுப்பேற்றுள்ளார். நேற்று இம்பாலுக்கு வந்த அஜய் குமார் பல்லாவுக்கு, ராஜ்பவனில் முதல்வர் என் பைரன் சிங்கால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்பு: புவனேஸ்வரில் உள்ள ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3, 2025) நடைபெற்ற விழாவில், ஒடிசாவின் 27வது ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்றார். முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஹரி பாபு கம்பம்பட்டிக்கு ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஒடிசா ஆளுநராக இருந்த ரகுபர் தாஸ் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழா முடிந்த உடன் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முன்னதாக, நேற்று ஒடிசா வந்த ஹரி பாபு கம்பம்பட்டி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT