Published : 03 Jan 2025 12:15 PM
Last Updated : 03 Jan 2025 12:15 PM
நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-24 காலகட்டத்தில் சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதானி மற்றும் அவரது உறவினர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் இரண்டு சிவில் வழக்குகள் தொடர்ந்து உள்ளது.
அதன்படி, அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கு, அதானிக்கு எதிரான சிவில் வழக்கு, குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுக்கு எதிரான சிவில் வழக்கு என விசாரணையில் இருக்கும் இந்த மூன்று வழக்குகளையும் கூட்டாக இணைக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் நீதிமன்றம் தரப்பில், நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு வழக்குகளும் வெவ்வேறு காலங்களில் விசாரிக்கப்படும். முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மாவட்ட நீதிபதி நிகோலஸ் ஜி கராஃபிஸிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே அவர் அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், “அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்தக் குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். ‘குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என்று அமெரிக்க நீதித் துறையே கூறி இருக்கிறது.” என்று தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT