Published : 03 Jan 2025 08:51 AM
Last Updated : 03 Jan 2025 08:51 AM
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கைதிகள் பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய சிறைகளில் தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 381 சிவில் கைதிகளும், 81 மீனவர்களும் உள்ளனர். அதேபோல் பாகிஸ்தானில் இந்திய சிவில் கைதிகள் 49 பேரும், 217 மீனவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தண்டனை காலம் நிறைவடைந்த இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகள் 183 பேரை விரைவில் இந்தியா அனுப்பும்படி பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய சிவில் கைதிகள் மற்றும் மீனவர்கள் 18 பேருக்கு உடனடியாக இந்திய தூதரக உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய சிறைக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும்படியும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் என நம்பப்படும் 76 பேரின் குடியுரிமையை விரைவில் சரிபார்த்து தகவல் தெரிவிக்கும்படியும் இந்தியா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளால், 2,639 இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகள் பாகிஸ்தானிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 478 இந்திய மீனவர்கள் மற்றும் 13 இந்திய சிவில் கைதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT