Published : 03 Jan 2025 04:59 AM
Last Updated : 03 Jan 2025 04:59 AM
புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுதோறும் தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்துவிட்டது. எனினும், நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி, நீட் தேர்வு நடைமுறைகளை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ரன்தீப் குலேரியா, பி.ஜே.ராவ், ராமமூர்த்தி, பங்கஜ் பன்சால், ஆதித்ய மிட்டல், கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை சிறப்பு குழு கேட்டறிந்தது. இதில், சுமார் 35,000-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன. இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. அத்துடன், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) நடைமுறைகளையும் சிறப்பு குழு முழுமையாக ஆய்வு செய்தது. 2 மாதங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் குழு தனது பரிந்துரைகளை மத்திய கல்வித் துறையிடம் சமர்ப்பித்தது.
‘காகித தேர்வுத்தாள் நடைமுறையை தவிர்த்து ஆன்லைன் முறையில் நீட் தேர்வை நடத்த வேண்டும். அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் அமைக்க கூடாது. ஜேஇஇ தேர்வு போல, 2 கட்டங்களாக நீட் தேர்வை நடத்தலாம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராதாகிருஷ்ணன் குழு வழங்கியுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நீட் தேர்வு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ராதாகிருஷ்ணன் தலைமையிலான சிறப்பு குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்’ என்று உறுதி அளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். ‘‘நீட் தேர்வை வழக்கமான வினாத்தாள் அடிப்படையில் நடத்தலாமா, ஆன்லைன் முறையில் நடத்தலாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மே மாதம் நடக்க உள்ள நீட் தேர்வு எந்த நடைமுறையில் நடத்தப்படும் என மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT