Published : 03 Jan 2025 03:00 AM
Last Updated : 03 Jan 2025 03:00 AM
ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றும் அவருக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகள் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70), கன்னவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கினார். அவருடைய உடல்நிலை மோசமாகி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு கடந்த டிசம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அதிகாரிகள் ஜெகஜித் சிங்கை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தை அழைத்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வருவேன் என ஜெகஜித் சிங் கூறிவிட்டார். இது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இதையடுத்து, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இதனிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜெகஜித் சிங்கின் உண்ணா விரத போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்” என்றார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “ஜெகஜித் சிங்கின் உண்ணா விரதத்தை பாதியில் நிறுத்த உச்ச நீதிமன்றம் முயல்வதாக பஞ்சாப் அரசு அதிகாரிகளும் சில விவசாய சங்க தலைவர்களும் ஊடகங்களில் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அவர்கள் பொறுப்பு இல்லாமல் தவறான கருத்துகளைக் கூறுவதால் சிக்கல்தான் ஏற்படும். ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. அவருடைய உடல்நிலை பற்றி தான் கவலை கொண்டுள்ளோம். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றுதான் நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். மாநில தலைமைச் செயலாளரும் காவல் துறை தலைவரும் காணொலி மூலம் ஆஜராகினர். ஜெகஜித் சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 6-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT