Published : 03 Jan 2025 02:53 AM
Last Updated : 03 Jan 2025 02:53 AM
புதுடெல்லி: தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தலைமை வகிக்கிறது பாஜக. பிஹாரில் என்டிஏவுக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. சுமார் 20 வருடமாக அசைக்க முடியாத முதல்வராக பிஹாரில் தொடர்கிறார் நிதிஷ். இடையில் அவர் மாறிய லாலு பிரசாத் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சிலும் நிதிஷ் குமாரே முதல்வரானார். பிஹாரின் கடந்த பேரவை தேர்தலில் நிதிஷைவிட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், நிதிஷ் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிஹார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜகவைச் சேர்ந்த வரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், நிதிஷுக்கு மெகா கூட்டணியின் கதவுகள் மூடப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 1-ல் லாலுவின் மனைவி ராப்ரி தேவிக்கு பிறந்தநாள் வந்தது. இதற்காக பிஹாரின் முன்னாள் முதல்வருமான ராப்ரிக்கு பாட்னாவில் விழா கொண்டாடினார் லாலு. இந்த விழாவில் லாலு கூறும்போது, “பொதுமக்கள் மற்றும் முதல்வர் நிதிஷ் குமாருக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வர வேண்டும். அவர் மீண்டும் மெகா கூட்டணியில் சேரவிரும்பினால் வரலாம்” என்றார்.
கடந்த 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், பிஹாரில் அதன் கூட்டணிகளான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 12 மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி 5 உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி தொடர்கிறது. இந்நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துவிட்டால் சட்டப் பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக மாறிவிடும் என கூறப்படுகிறது.
நிதிஷ்குமார் பதில்: பிஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள ஆளுநர் மாளிகையில், புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் நேற்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார். விழா முடிந்ததும், ஆளுநருடன் முதல்வரும் வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள், அவரிடம், லாலு பிரசாத்தின் அழைப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நிதிஷ் குமார் கூறும்போது “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இது ஒரு சுதந்திரமான சமூகம். யார் வேண்டுமாலும் தாங்கள் விரும்பியதைப் பேச முடியும்” என்றார்.
அரசியல் இல்லை: பிஹாரின் புதிய ஆளுநர் ஆரிப் முகமது கான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று முன்தினம் சந்தித்தார். இதுகுறித்து ஆரிப் முகமது கான் நேற்று கூறும்போது, "நீங்கள் ஓர் இடத்துக்கு சென்றால், அங்கு உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் இருந்தால், அவர்களை சந்திக்க விரும்ப மாட்டீர்களா? அதுபோலத்தான் 1975-ல் இருந்து எனக்கு தெரிந்தவர்களின் ஊருக்கு வந்தவுடன் அவர்களுடன் சிறிது நேரம் செலவிட விரும்பினேன். இதுபற்றி நீங்கள் கேள்வி எழுப்புவது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT