Published : 02 Jan 2025 08:38 PM
Last Updated : 02 Jan 2025 08:38 PM
புதுடெல்லி: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும்போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது? - அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ம் தேதி அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் லாரியை ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது மோதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்திய அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
தாக்குதல் நடத்தியவரின் பெயர் சம்சுதீன் பாகர் ஜாபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி, ஆயுதங்கள், வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT