Last Updated : 02 Jan, 2025 07:35 PM

 

Published : 02 Jan 2025 07:35 PM
Last Updated : 02 Jan 2025 07:35 PM

பஞ்சாப் விவசாயி தல்லேவால் உண்ணாவிரத போராட்டக் களத்தில் பி.ஆர்.பாண்டியன் - உச்ச நீதிமன்றத்துக்கு வேண்டுகோள்

புதுடெல்லி: பஞ்சாப் விவசாயி தல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தில் எஸ்கேஎம் என்பி தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்யுக்த்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) என்பி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போராட்டம், பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பார்டரில் 38-வது நாளாகத் தொடர்கிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், எஸ்கேஎம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான பி.ஆர்.பாண்டியன் அதில் கலந்து கொண்டார்.

கடும் குளிரில் தமிழகத்தில் இருந்து வந்த பி.ஆர்.பாண்டியன் கண்ணூரி பார்டரில் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய விவசாயிகளுடைய உரிமைக்காகவும் நலனுக்காகவும் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் சம்யுக்த்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால். இவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கிறோம்.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 50 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு பத்தாயிரம் விவசாயிகள் கைதாகினர். நாடாளுமன்ற மக்களவையின் எம்.பி.யான ஜோதிமணி, தல்லேவால் உடல்நிலையை கருத்தில் கொண்டு எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதார விலை) குறித்து அவசர முடிவெடுக்க வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 23-ல் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவளித்துள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம்.

உண்ணாவிரதப் போராட்டத்தையும் விவசாயிகளின் ஒற்றுமையையும் சீர்குலைக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். உச்ச நீதிமன்றம் தல்லேவால் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துள்ளது. அதேநேரம் எம்எஸ்பி உள்ளிட்ட கோரிக்கைகளின் நியாயத்தை நீதியரசர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, தல்லேவால் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியம்.

அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறோம். ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருவதால் நாடு முழுவதும் 100 கோடி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்ட முடிவுக்காக உணர்வுபூர்வமாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

தல்லேவால் உடல் நலம் குறித்து மிகுந்த அக்கறையுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து உள்ளனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்திருக்கிறது. எனவே, மத்திய அரசை வலியுறுத்தியும், தல்லேவால் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். போராட்டக் குழு அறிவிக்கிற அத்தனை போராட்டங்களையும் தமிழக, புதுச்சேரி விவசாயிகள் முழு மனதோடு ஆதரித்து நிறைவேற்றுவோம் என்கிற உறுதி அளிப்பதற்காக நாம் வந்திருக்கிறோம்” என்றார்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா விவசாயிகள் இங்கே 20 பேர் வந்துள்ளனர். இவர்கள், முன்னதாக நடைபெற்ற முழக்கப் போராட்டத்திலும் பங்கேற்றனர். 40-வது நாள் போராட்டத்தில் 5 லட்சம் விவசாயிகள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளார்கள். இதில், எஸ்கேஎம் என்பியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர்கள் லக்வீந்தர்சிங், அபிமன்யூ கொஹார், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கர்நாடகா குருபுரு சாந்தக்குமார், செல்வி சுதா தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x