Published : 02 Jan 2025 02:20 PM
Last Updated : 02 Jan 2025 02:20 PM
புதுடெல்லி: கடந்த 1947, ஆகஸ்ட் 15-ல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள பழைய மனுக்களுடன் ஒவைசியின் புதிய மனுவினை இணைக்க உத்தரவிட்டது. அவை பிப்ரவரி 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.
அசாதுதீன் ஒவைசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஷாம் பாஷா, “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய மனுவினையும் அவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, நாங்கள் மனுவினை இணைக்கிறோம் என்று தெரிவித்தார். முன்னதாக, டிச.17-ம் தேதி வழக்கறிஞர் ஃபவுசில் அஹ்மத் அயுபி மூலம் ஒவைசி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1991-ம் ஆண்டு மதவழிபாட்டுதலங்கள் சட்டத்தினை திறம்பட அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் அவர் தனது மனுவில், இந்து வழக்கறிஞர்களின் மனுக்களின் அடிப்படையில், பல்வேறு நீதிமன்றங்கள் மசூதிகளில் தொல்பொருள் ஆய்வு நடத்த உத்தரவிட்டிருப்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, டிச.12-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, “மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரையில் அனைத்து நீதிமன்றங்களிலும் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை பதிவு செய்யக்கூடாது, விசாரணை நடத்தக்கூடாது.
எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டாலும் அதை பதிவு செய்யக்கூடாது.” என்று உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT