Published : 01 Jan 2025 04:22 PM
Last Updated : 01 Jan 2025 04:22 PM
புதுடெல்லி: கோயில் - மசூதி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு அவரது அமைப்பின் ஒரு பகுதி மற்றும் விஹெச்பி-யில் எதிர்ப்புகள் கிளம்புவது தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைஸர்’ இதழில் முகப்பு செய்தியாக சம்பல் விவகாரம் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் உள்ள ஜாமா மசூதியிலும், அம்மாநிலத்தின் வேறு பல இடங்களில் உள்ள மசூதிகளிலும் கோயில்கள் இருந்ததாகப் புகார்கள் கிளம்பி வருகின்றன. ராஜஸ்தான் அஜ்மீரின் காஜா ஷெரீப் தர்காவிலும் கோயில் இருந்ததாக நீதிமன்ற வழக்காகி உள்ளது. இச்சூழலில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர், நாட்டில் இனி கோயில் - மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்துக்களின் தலைவர்களாக தம்மை முன்னிறுத்த சிலர் கோயில் - மசூதி விவகாரங்களை எழுப்புவதாகவும் அவர் விமர்சித்தார். பாகவத்தின் இக்கருத்திற்கு உபியின் சமாஜ்வாதி எம்பிக்களும், சில முஸ்லிம் தலைவர்களும் ஆதரவளித்தனர். அதேநேரத்தில், மாடாதிபதிகளும், துறவிகளும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அதிகாரப்பூர்வ, ‘ஆர்கனைஸர்’ இதழில் சம்பல் விவகாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு முகப்பு செய்தி வெளியாகி உள்ளது.
ஆங்கில வார இதழான ஆர்கனைஸரில் ’கலாச்சார நாகரிக நீதி பெறுவதற்கானப் போர்’ என்ற தலைப்பிலான கட்டுரையில், ‘ஒரு தனிப்பட்டவர் அல்லது மதத்தின் இடம் அபகரிக்கப்பட்டால் அதை எதிர்ப்பது அவர்கள் உரிமை. அவர்கள் தம் இடத்தை திரும்பப்பெற சட்டப்படி போராடுவதில் என்ன தவறு? இதற்கு அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டத்திலும் இடம் உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன் சோம்நாத் கோயில் முதல் சம்பல் வரையிலான மீட்பு போராட்டங்களும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதழாசிரியரான பிரபுல் கேட்கர், கோயில்-மசூதி விவகாரங்களுக்கு ஆதரவளிக்கும் கருத்துக்களை தனது ஆசிரியர் குறிப்பில் எழுதியுள்ளார். எனவே, மோகன் பாகவத்தின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் ஒருதரப்பினர் இடையே எதிர்ப்புகள் நிலவுவதாகக் கருதப்படுகிறது.
இதே விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்-ன் பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் சர்வதேச இணை பொதுச்செயலாளரான சுரேந்திரா ஜெயின் விடுத்த அறிக்கையில், ‘இந்தியாவில் பல லட்சம் கோயில்களை முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இடித்து அவற்றில் மசூதிகளை கட்டினார்கள் என்பதை அனைவரும் அறிவர். ராமர் கோயில் விவகாரத்தின்போது, அயோத்யா, காசி மற்றும் மதுராவின் மசூதி இடங்களை மட்டும் விட்டுக்கொடுத்தால் இதர கோயில்கள் விவகாரத்தை நாம் கைவிடுவதாக முஸ்லிம்களிடம் தெரிவித்தோம்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால்தான் நாம் நீண்ட நீதிப் போராட்டம் நடத்தி அயோத்யாவில் ராமர் கோயிலை கட்டினோம். இன்றுகூட நாம் காசி, மதுராவை விட்டுத்தரும்படிக் கூறுகிறோம். இதை அவர்கள் செய்தால் நம் மதத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வோம். ஆனால், தற்போது நிலவும் சூழலில் நாம் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உபியில் மட்டும் கடந்த 48 மணி நேரத்தில் புராதனமான 11 கோயில்கள் முஸ்லிம்கள் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒருசில, முஸ்லிம்களின் இடுகாடாக மாற்றப்பட்டுள்ளதாகப் புகார்கள் கிளம்பி உள்ளன. இச்சூழலில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இந்தி இதழான 'பாஞ்ச சண்யா'வில் மோகன் பாக்வத்தின் கருத்தை ஆதரிக்கும் வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT