Published : 01 Jan 2025 03:31 PM Last Updated : 01 Jan 2025 03:31 PM
2025-ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்: காரணம் என்ன?
புதுடெல்லி: 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் 'சீர்திருத்த ஆண்டாக' கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். 2025 ஆம் ஆண்டில் கவனம் செலுத்த பின்வரும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டன:
சீர்திருத்தங்கள் என்பவை கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஒருங்கிணைந்த கட்டளைகளை நிறுவுவதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
சைபர் மற்றும் விண்வெளி போன்ற புதிய களங்களிலும், செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல், ஹைப்பர்சோனிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் அவை தொடர்பான சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலப் போர்களை வெல்வதற்குத் தேவையான தொடர்புடைய உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
சேவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி மூலம் செயல்பாட்டு தேவைகள் கூட்டு செயல்பாட்டு திறன்கள் பற்றிய பகிரப்பட்ட புரிதலை உருவாக்குதல்.
விரைவான வலுவான திறன் மேம்பாட்டை எளிதாக்குவதற்கு கையகப்படுத்தல் நடைமுறைகள் எளிமையாகவும் நேர உணர்திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
பாதுகாப்புத் துறை மற்றும் சிவில் தொழில்களுக்கு இடையே தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வுக்கு வழிவகை செய்தல், எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்துவதன் மூலம் பொது-தனியார் கூட்டாண்மையை ஊக்குவித்தல்.
பாதுகாப்பு சூழல்சார் அமைப்பில் பல்வேறு பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல். திறமையான சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு திறமையின்மைகளை அகற்றுவதையும் வளங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அறிவுப் பகிர்வு மற்றும் வள ஒருங்கிணைப்புக்காக இந்திய தொழில்கள் மற்றும் வெளிநாட்டு இயந்திர உற்பத்தியாளர்களுக்கு இடையே ஆராய்ச்சி, மேம்பாட்டு மற்றும் கூட்டாண்மையை ஊக்குவித்து, பாதுகாப்பு தயாரிப்புகளின் நம்பகமான ஏற்றுமதியாளராக இந்தியாவை நிலைநிறுத்துதல்.
முன்னாள் படைவீரர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் அதேவேளை அவர்களின் நலனை உறுதி செய்தல். முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
இந்திய கலாச்சாரம் மற்றும் கருத்துகளில் பெருமித உணர்வை ஏற்படுத்துதல், உள்நாட்டு திறன்கள் மூலம் உலகத் தரத்தை அடைவதற்கான நம்பிக்கையை வளர்த்தல், அதே நேரத்தில் நாட்டின் நிலைமைகளுக்கு பொருத்தமான நவீன ராணுவங்களிடமிருந்து சிறந்த நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளுதல்.
ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் பயணத்தில் 'சீர்திருத்தங்களுக்கான ஆண்டு' ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். "இது நாட்டின் பாதுகாப்பானது தயார்நிலையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும், இதனால் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்ய இத்துறை தயாராகிறது" என்று அவர் கூறினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT