Published : 01 Jan 2025 10:09 AM
Last Updated : 01 Jan 2025 10:09 AM
புதுடெல்லி: 2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், "இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 இன் புதிய விடியல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்துடன் ஒளிரச் செய்யட்டும். எல்லா இடங்களிலும் வளமும் செழிப்பும் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அபரிமிதமான மகிழ்ச்சியும் உற்சாகமும் நிரப்பட்டும்" என தெரிவித்துள்ளார்.
"அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கட்டும்" என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது வாழ்த்துச் செய்தியில், "மகிழ்ச்சியான மற்றும் வளமான 2025 அமைய வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! எங்கும் நலமே சூழட்டும்" என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த பாரம்பரியமும், கலாச்சாரமும், செழுமையும், வளமும் நிறைந்த தமிழகம் தற்போது, ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெருகி வரும் போதைப்பொருள்கள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி என, இருள் சூழ்ந்து இருப்பதைப் பார்க்கிறோம். வரும் 2025 ஆம் ஆண்டு, தமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறந்திடவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிடவும், நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திடவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, "புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சமூக பொருளாதாரத்தில் தமிழக மக்கள் ஏற்றம் பெற்று விளங்கிட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சீர்மிகு திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வினை வளமாக்கிக் கொள்வதுடன், அயராது உழைத்து தமிழ்நாடு மென்மேலும் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம். மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்து வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக புதிய ஆண்டு, புதிய தொடக்கங்கள் மலரட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT