Published : 01 Jan 2025 09:21 AM
Last Updated : 01 Jan 2025 09:21 AM

ஆங்கில புத்தாண்டு | கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று மக்கள் வழிபாடு

திருச்சியில் மலைக்கோட்டையில் உள்ள மாணிக்க விநாயகர் கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை

புதுடெல்லி: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உட்பட நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர்.

2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதேபோல், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். டெல்லியின் ஜந்தேவாலன் கிருஷ்ணர் கோயில், பிர்லா மந்திர், சத்தார்பூர் துர்க்கை கோயில், ஹனுமன் கோயில், கல்காஜி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அயோத்தியில் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சரயு நதியில் நீராடி சூரியனுக்கு தீபம் காட்டி, பின்னர் ராமர் கோயில் சென்று வழிபாடு மேற்கொண்டனர். உத்தராகண்ட்டின் ஹரித்வார் நகரில் அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள குவாஜா கரீப் நவாஸ் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து தீபம், ஊதுபத்தி ஆகியவற்றைக் காட்டி வழிபாடு மேற்கொண்டனர்.

ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாக அதிகாரி அரபிந்த குமார் பதி, "ஆங்கில புத்தாண்டையொட்டி, ஸ்ரீ ஜெகநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வரிசையில் நின்று ஒழுக்கமான முறையில் தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீ ஜகந்நாதரின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திப்போம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டுக்காக ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில் குறிப்பிட்ட சடங்குகள் எதுவும் இல்லை. விரைவில் பஹிலி போக சடங்கு நடக்க இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.

அனைத்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x