Published : 01 Jan 2025 03:30 AM
Last Updated : 01 Jan 2025 03:30 AM
ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில், அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருந்த போதிலும், மின்வாரியம் டெண்டரை ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்பிரிவில் உள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்குப் பதிலாக, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கான மின்இணைப்புகளை தவிர மற்ற அனத்துப் பிரிவுகளிலும் உள்ள மின்இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீ்ட்டர் பொருத்தப்பட உள்ளது. இதற்காக, மத்திய அரசின் உதவியுடன் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை வாங்க திட்டமிட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 டெண்டர்கள் விடப்பட்டன.
டெண்டர் எடுக்கும் நிறுவனம் மீட்டர்களை நுகர்வோர் இடத்துக்குச் சென்று பொருத்துவது, பராமரிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும், மின்வாரியம் தற்போது வீடுகளுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்கட்டணத்தை வசூலித்து வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தவும் திட்டமிட்டிருந்தது.
ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டர்கள் நான்கு பேக்கேஜ்களாக வெளியிடப்பட்டன. இதில், முதல் பேக்கேஜ்ஜில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், மற்ற நிறுவனங்களைவிட அதானி நிறுவனம்தான் குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தது. எனினும், டெண்டரை மின்வாரியம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையை டெண்டரில் குறிப்பிட்டிருந்தது. எனினும், விலையை மேலும் குறைக்க டெண்டரில் பங்கேற்ற அதானி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகை கட்டுப்படியாகாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விரைவில் மீண்டும் விடப்படும்’ என்றனர். இதற்கிடையே, மற்ற 3 பேக்கேஜ்களுக்கான டெண்டர் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT