Published : 01 Jan 2025 03:14 AM
Last Updated : 01 Jan 2025 03:14 AM
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வரும் 9-ம் தேதி முதல் திருப்பதியில் 8 இடங்களில் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. ஜனவரி 19-ம்தேதி வரை பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே 1.4 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான 2 லட்சம் டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே விநியோகம் செய்யப்பட்டு விட்டன. முதியோர், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மாற்றுத் திறனாளி பக்தர்களுக்காக வழங்கப்படும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. விஐபி சிபாரிசு கடிதங்களும் மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிக்கெட் இல்லாத பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்றுத்தான் திருமலைக்கு சென்று சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க இயலும். திருப்பதியில் விஷ்ணு நிவாசம், ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதிகள், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், இந்திரா விளையாட்டு மைதானம், எம்ஆர் பல்லி மற்றும் ஜீவகோனா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ராமசந்திரா புஷ்கரணி, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி, மற்றும் திருமலையில் உள்ள பாலாஜி காலனி சமூக கூடம் ஆகிய பகுதிகளில் வரும் 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் ஆதார் அட்டை மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும், தரிசன டோக்கன்களோ, டிக்கெட்டுகளோ இல்லாமல் ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமியை தரிசிக்க இயலாது என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ள 8 மையங்களில் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக ‘ஷெட்’ கள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. வரிசையில் காத்திருந்து டோக்கன்கள் பெறும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி, உணவு, டீ, காபி போன்றவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT