Published : 01 Jan 2025 02:50 AM
Last Updated : 01 Jan 2025 02:50 AM
மைசூரு இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் ஒரு சிறுத்தை சுற்றித் திரிவது தெரியவந்துள்ளது. இதையடுத்து நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குதான் இன்போசிஸ் நிறுவனங்களில் இணையும் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன.
நிறுவன வளாகம், மைசூருக்கு அருகிலுள்ள வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்து திரிந்து வருவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஊழியர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என்று உத்தரவிட்டனர். மேலும், ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு நிர்வாகம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்போசிஸ் வளாகத்தில் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் 50 பேர் அடங்கிய வனத்துறை குழு ஈடுபட்டுள்ளது. ஆங்காங்கே கூண்டுகள் அமைத்தும் சிறுத்தையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன்கள் மூலம் சிறுத்தை எங்கு உலாவுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 370 ஏக்கர் பரப்பளவு கொண்ட இன்போசிஸ் மைசூரு வளாகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT