Published : 01 Jan 2025 02:44 AM
Last Updated : 01 Jan 2025 02:44 AM
புதுடெல்லி: நாட்டின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மொத்தம் உள்ள 31 மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாக உள்ளது. அதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.931 கோடியாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு இருக்கிறார். அதேநேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ரூ.15 லட்சம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மிகவும் ஏழை முதல்வராக அவர் இருக்கிறார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதல்வர்களின் சராசரி சொத்து ரூ.52.59 கோடியாக உள்ளது.
சந்திரபாபுவுக்கு அடுத்து அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு பணக்கார முதல்வர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.332 கோடியாகும். கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடி சொத்துகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். தவிர காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55 லட்சத்துடன் ஏழை முதல்வர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.
கிரிமினல் வழக்குகள்: தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக 13 முதல்வர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், கொலை முயற்சி, கடத்தல், ஊழல் என மிக தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக 10 முதல்வர்கள் அறிவித்துள்ளனர். நாட்டில் உள்ள 31 முதல்வர்களில் மேற்கு வங்க மம்தா,டெல்லி முதல்வர் அதிஷி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT