Published : 30 Dec 2024 06:48 PM
Last Updated : 30 Dec 2024 06:48 PM
புதுடெல்லி: இந்தியா - சீனா எல்லையில், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிக்கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவிய நிலையில், அதற்கான காரணம் குறித்து லடாக்கில் உள்ள சுஷுல் பகுதியின் கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சுஷுல் பகுதியின் கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாங்காங்கில் உள்ள சிவாஜி சிலை குறித்த எனது கவலைகளை உள்ளூர்வாசி என்ற முறையில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். உள்ளூர் மக்களின் கோரிக்கை இன்றி இது கட்டப்பட்டுள்ளது. அதோடு, எங்கள் பகுதியின் தனித்துவமான சுற்றுச்சூழல், வனவிலங்குகளின் நலனையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். எங்கள் சமூகம் மற்றும் இயற்கையை உண்மையாக பிரதிபலிக்கும், மதிக்கும் திட்டங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சிவாஜி சிலையை நிறுவிய ராணுவம்: இந்த சிலை மராட்டிய யூனிட் பகுதிக்குள் உள்ளது என்றும், இது அந்தப் பிரிவில் பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டது என்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 14,300 அடி உயரத்தில் பாங்காங் த்சோவின் கரையில் கட்டப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜியின் கம்பீரமான சிலை கடந்த 26-ம் தேதி திறக்கப்பட்டதாக லே-வை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸ் என்ற ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
“வீரம், தொலைநோக்கு மற்றும் அசைக்க முடியாத நீதியின் உயர்ந்த இந்த சின்னம் (சிலை) லெப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லாவால் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வு, தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் இந்திய ஆட்சியாளரின் அசைக்க முடியாத உணர்வைக் கொண்டாடுகிறது” என்று மராட்டிய யூனிட்டின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஜோரவர் சிங் சிறந்த தேர்வாக இருந்திருக்கலாம்: பாங்காங் த்சோவில் சிவாஜி சிலை நிறுவியதை வீரர்கள் பலரும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளனர். சிவாஜியின் சிலைக்கு பதிலாக, ஜோராவர் சிங்கின் சிலை வைக்கப்பட்டிருந்தால் அது மிகவும் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், படைவீரர்களை ஊக்குவிப்பதற்காக, காலாட்படை பிரிவுகள், யூனிட் தொடர்பான ஐகான்களை வைக்கும் பாரம்பரயம் நீண்ட காலமாக இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளிலிருந்து படையை வாபஸ் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது முதல் முறை அல்ல: நவம்பர் 2023-இல், காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரால் 10.5 அடி உயர சிவாஜி சிலை திறக்கப்பட்டது. மும்பையில் இருந்து அனுப்பப்பட்ட இந்த சிலை, 41 ராஷ்டிரிய ரைபிள்ஸ் (மராட்டிய எல்ஐ) தலைமையகத்தில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT