Published : 30 Dec 2024 05:33 PM
Last Updated : 30 Dec 2024 05:33 PM

‘மன்மோகன் மறைவில் அரசியல் ஆதாயம்’ - ராகுல் மீதான பாஜக குற்றச்சாட்டும், காங். பதிலடியும்

மன்மோகன் சிங் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராகுல் காந்தி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை ராகுல் காந்தி தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

ராகுல் காந்திக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, "டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு நாடே இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், புத்தாண்டை கொண்டாட ராகுல் காந்தி வியட்நாம் சென்றுள்ளார். மன்மோகன் சிங்கின் மரணத்தை தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி அதனை அரசியலாக்கினார். ஆனால், மன்மோகன் சிங் விஷயத்தில் ராகுல் காட்டிய அவமதிப்பு மறக்க முடியாதது. காந்திகளும் காங்கிரஸும் சீக்கியர்களை வெறுக்கிறார்கள். இந்திரா காந்தி தர்பார் சாஹிப்பை இழிவுபடுத்தினார் என்பதை மறந்துவிடாதீர்கள்" என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "இந்த ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை சங்கிகள் எப்போது நிறுத்துவார்கள்? மன்மோகன் சிங்கின் உடலை யமுனைக் கரையில் தகனம் செய்வதற்கு இடம் ஒதுக்க நரேந்திர மோடி மறுத்த விதமும், அவரது அமைச்சர்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிய விதமும் வெட்கக்கேடானது. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் பயணம் செய்தால், அது ஏன் உங்களைத் தொந்தரவு செய்கிறது? புத்தாண்டில் நலம் பெறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் மறைவு: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 26ம் தேதி அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி அன்று இரவு காலமானார். 92 வயதான அவர், வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்தது. மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு கடந்த 28ம் தேதி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் நடந்தது.

இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சுக், காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் ஆதிஷி, முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

21 குண்டுகள் முழங்க மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மூத்த மகள் உபிந்தர் கவுர்தீ மூட்டினார். சீக்கிய மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் உள்ளிட்ட தலைவர்கள் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x