Published : 30 Dec 2024 04:31 PM
Last Updated : 30 Dec 2024 04:31 PM

“கேஜ்ரிவால் பொய்யர் என்பது மீண்டும் நிரூபணம்” - ரோஹிங்கியா விவகாரத்தில் பாஜக காட்டம்

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி .

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக டெல்லியில் ரோஹிங்கியாக்களை குடியேற்றி இருப்பதாக கேஜ்ரிவால் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் பரப்புவதால் அது உண்மை ஆகிவிடாது. ஆம், அது நிச்சயமாக நீங்கள் பொய்யர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும். உண்மை என்னவென்றால், இன்றுவரை எந்த ரோஹிங்கியா மக்களுக்கும் இடபிள்யூஎஸ் (EWS) பிளாட் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு இலவச ரேஷன், தண்ணீர், மின்சாரம், தலா ரூ.10,000 கொடுத்து டெல்லியில் குடியமர்த்தி வாக்காளர் அட்டைகளை கொடுத்துள்ளார் கேஜ்ரிவால் கட்சியின் எம்எல்ஏ.

ஏனெனில், ரோஹிங்கியாக்கள் எந்தக் கட்சியின் வாக்காளர்களாக இருக்க முடியும் என்பது முழு நாட்டுக்கும் தெரியும். கெஜ்ரிவால் மீண்டும் மீண்டும் ரோஹிங்கியாக்களை ஆதரிப்பது நாட்டின் பாதுகாப்போடு விளையாடுவது போன்றது. ஆம் ஆத்மி கட்சியினர் பரப்பும் பொய் குறித்து உள்துறை அமைச்சகமும் நானும் உடனடியாக தெளிவுபடுத்தினோம். இது பொது தளத்தில் உள்ளது. ஆனால், பொய்களை பரப்புவது வெட்கமற்றது. இது கீழ் மட்ட அரசியலின் உச்சம். இதற்காக வெட்கப்படுகிறேன், பொய் சொல்வதை நிறுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஹர்தீப் சிங் பூரியை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் ரோஹிங்கியாக்களை எங்கு குடியமர்த்தினார், எப்படி குடியேற்றினார் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அவரிடம் உள்ளன. ரோஹிங்கியாக்கள் எங்கே குடியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்ற முழு விவரமும் அமித் ஷாவிடமும் ஹர்தீப் சிங் பூரியிடமும் உள்ளது" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x