Published : 30 Dec 2024 02:30 AM
Last Updated : 30 Dec 2024 02:30 AM
விஜயவாடா: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தை எண்ணும்போது ரூ.100 கோடி வரை மோசடி செய்த விவகாரம் குறித்து முன்னாள் அறங்காவலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர மாநில டிஜிபி திருமலராவிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
திருமலை பெரிய ஜீயர் மடத்தில் பணியாற்றிய ரவிகுமார் என்பவர் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணத்தை எண்ணும் இடமான ‘பரகாமணி’ க்கு மேற்பார்வையாளராக கடந்த ஜெகன் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். இவர் தனது உள்ளாடை மூலம் பல வெளிநாட்டு கரன்சிகளை அவ்வப்போது திருடி வந்துள்ளார். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை கடந்த ஆண்டு கைது செய்தனர். இவர் சுமார் ரூ.100 கோடி வரை திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.சி ராம்கோபால் ரெட்டி மற்றும் அப்போதைய பாஜக மாநில செய்தி தொடர்பாளரும், இப்போதைய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான பானுபிரகாஷ் ரெட்டி ஆகியோர் வலியுறுத்தினர்.
லோக் அதாலத்: இது தொடர்பாக திருமலை முதலாவது காவல் நிலையத்தில் பிரிவு 379 (திருட்டு) மற்றும் 381 (ஊழியர் செய்யும் திருட்டு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரவிகுமாரும் கைது செய்யப்பட்டார். திருப்பதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. திருடிய பணத்தில் ரவிகுமார், திருப்பதி மற்றும் சென்னையில் பல சொத்துகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த சொத்துகளை மீண்டும் திருப்பி கொடுத்து விடுவதாக ரவிகுமார் கூறினார். இதனால், லோக் அதாலத் மூலமாக வழக்கு ‘செட்டில்’ ஆனதாக தெரிவிக்கப்பட்டது.
சொத்தில் பங்கு: ஆனால், ரவிகுமார் தேவஸ்தானத்துக்கு கொடுத்த ரூ.100 கோடிமதிப்புள்ள சொத்துகளை கடந்த அறங்காவலர் குழுவை சேர்ந்த தலைவர் மற்றும் அதிகாரிகள் பங்கு போட்டு கொண்டனர் என தற்போது தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான பானுபிரகாஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அமராவதியில் போலீஸ் டிஜிபி திருமல ராவிடம் அவர் நேற்று புகார் மனு அளித்தார். இது தொடர்பாக விரிவான விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT