Published : 30 Dec 2024 02:24 AM
Last Updated : 30 Dec 2024 02:24 AM
செல்போன் திருடும் கும்பல், தனது குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம், தங்கும் இடம், உணவு, பயண செலவு ஆகிய சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
உத்தர பிரேதேசத்தில் ரயில்களில் செல்போன் திருட்டு அதிகளவில் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து உ.பி கோரக்பூர் ரயில்வே போலீஸார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களின் பதிவை ஆராய்ந்தனர். கோரக்பூர் ரயில் நிலையத்துக்கு தொடர்ச்சியாக வந்த சந்தேக நபர்கள் சிலரை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போன் திருடும் கும்பல என்பது உறுதியானது. அவர்களிடமிருந்து 44 ஆன்ட்ராய்டு போன்கள், ஒரு துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம்.
செல்போன் திருட்டு கும்பலுக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் மண்டல் (35) என்பவர் தலைவராக இருந்துள்ளார். இவரிடம் கரன் குமார் (19) அவரது 15 வயது சகோதரர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் கூட்டமாக இருக்கும் மார்க்கெட் பகுதி மற்றும் ரயில் நிலையங்களில் செல்போன்களை திருடியுள்ளனர். திருடப்படும் செல்போன்கள் எல்லாம், திருட்டு செல்போன்களை வாங்கும் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளன. அந்த செல்போன்கள் வங்கதேசம் மற்றும் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருட்டு செல்போன்களை வேறு நாடுகளில் விற்கப்படும்போது, அவைகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
செல்போன் திருட்டு கும்பலில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வெளியூரில் சென்று திருடச் சென்றால் அவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயணச் செலவுகளுக்கு தனியாக பணம் வழங்கப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT