Published : 30 Dec 2024 02:12 AM
Last Updated : 30 Dec 2024 02:12 AM
புதுடெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கிய மனதின் குரல் நிகழ்ச்சி நேற்றுடன் 117-வது அத்தியாயத்தை எட்டியுள்ளது. இந்தாண்டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளதாவது: உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும்.
இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான, பெருமை சேர்க்கும் விஷயம். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் ஃபிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் ஃபிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்றுவிப்பது இதுவே முதல்முறை. ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெருமிதத்தால் நிரப்புபவை. மொழி, இசை, கலை, ஆயுர்வேதம் என பாரதத்தில் அனைத்தும் கொட்டிக்கிடக்கிறது. அதனால்தான் இந்தியா உலகளவில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது.
எதிர் வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று நமது அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இது, நம் அனைவருக்கும் கவுரவமிகு தருணமாகும். நமது அரசியலமைப்பு சட்ட பிதாமகர்கள் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் அரசியலமைப்பு அனைத்து காலகட்டங்களிலும் நமக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. அந்த பாதையில் நாம் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இந்த அரசியல்சட்டத்தால்தான் நான் இங்கு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். தேசத்தின் குடிமக் கள் அனைவரும் அரசியலமைப்பின் பெருமைகளை உணர constitution75.com என்ற பெயரில் ஒரு சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு மொழிகளில் அரசியல் சட்டத்தை வாசித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். குறிப்பாக, பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
மகா கும்பமேளா: அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சங்கமத்தின் கரையில் தடபுடலாக நடந்தேறி வருகின்றன. இந்த கும்பமேளாவின்போது ஒற்றுமை, உறுதிப்பாட்டை மனதில் ஏந்தி வீடு திரும்புவோம். சமுதாயத்தில் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வுக்கு முடிவுகட்டும் உறுதிப்பாட்டையும் ஏற்போம். 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மனதின் குரல் தேசத்தின்
சமூக சக்தியின் உயிர்ப்புடைய ஆவணமாக மாறியிருக்கிறது. தேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருக்கும் ஆக்கப்பூர்வமான சக்தியை இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கிறது. இப்போது, 2025-ம் ஆண்டின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறது. வரும் ஆண்டிலும் மனதின் குரல் வாயிலாக நாம் மேலும் உத்வேகம் அளிக்கும் முயற்சிகளைப் பரிமாறிக் கொள்வோம். அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT