Published : 29 Dec 2024 03:28 AM
Last Updated : 29 Dec 2024 03:28 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மகா கும்பமேளாவில் 5 லட்சம் பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் உள்ள பிரபல 240 கண் மருத்துவமனைகளுடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்குகிறது. இதில் முதல் முறையாக பல உலக சாதனைகளை படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வகையில், மகா கும்பமேளாவுக்கு வருபவர்களில் சுமார் 5 லட்சம் பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அப்போது கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கும் அதை இலவசமாகவே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜனவரி 5-ம் தேதி ‘‘நேத்ரா கும்ப் (கண் கும்ப)’’ எனும் பெயரில் திரிவேணி சங்கமத்தில் இதற்கான முகாம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் ரஞ்சன் வாஜ்பாய் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு கும்பமேளாவை விட இந்த மகா கும்பமேளாவில் 2 மடங்குக்கும் அதிக எண்ணிக்கையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மூன்று லட்சம் பேருக்கு இலவச மூக்கு கண்ணாடியும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான மருத்துவ முகாம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. 140 மருத்துவர்கள் பணியாற்றும் முகாமில் தினமும் சுமார் 10,000 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும்’’ என்றார்.
ஜனவரி 5-ம் தேதி இதற்கான முகாமை ஜுனா அகாலா தலைவர் ஆச்சாரியா மகா மண்டலேஷ்வர் அவ்தேஷானந்த் கிரி மகராஜ் தொடங்கி வைக்கிறார். ஒரே இடத்தில் பெரும் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இலவச கண் சிகிச்சை நடைபெற்றதற்காக கின்னஸ் சாதனை பதிவு செய்ய உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இதே மகா கும்பமேளாவில் இந்திய ராணுவத்தின் சார்பிலும் தனியாக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்துடன், பார்வையாளர்களைக் கவரும் வகையில் லேசர் வண்ண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலையில் 2,000 டிரோன்கள் வானில் பறந்த படி புராணங்களின் காட்சிகள் லேசர் ஒளிவண்ணத்தில் நிகழ்த்தி காட்ட உ.பி. சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT