Published : 28 Dec 2024 01:00 PM
Last Updated : 28 Dec 2024 01:00 PM

முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்: தலைவர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி: முன்னதாக, இன்று காலை மன்மோகன் சிங்கின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், சசி தரூர், பவன் கெரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

நிகம்போத் காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்: மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுரும், காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்து கணவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் அங்கிருந்து டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி: நிகம்போத் காட் பகுதிக்கு வருகை தந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்: தலைவர்களின் இறுதி மரியாதையை அடுத்து மன்மோகன் சிங்கின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சந்தனக் கட்டைகள் மீது மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டு, சீக்கிய மத முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், மகள்கள், நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சடங்குகளைச் செய்தனர். பின்னர் மன்மோகன் சிங் உடலைச் சுற்றி கட்டைகள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பகல் 1 மணி அளவில் 21 குண்டுகள் முழுங்க முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்டப்பட்டது.

நினைவிட சர்ச்சை: முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கும் வண்ணம் இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு இடம் ஒதுக்குவது, எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ஒரு தலைவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதன் முடிவுகள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர்களுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் முடிவுகளின்படி மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்ட அரசு இடம் ஒதுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x