Published : 28 Dec 2024 05:13 AM
Last Updated : 28 Dec 2024 05:13 AM
புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லி யமுனை நதிக்கரையில் சீக்கிய மத முறைப்படி இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 9.51 மணி அளவில் காலமானார்.
இதையடுத்து, டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அப்போது. “மன் மோகன் சிங் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை இரங்கல்: முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மறைந்த மன்மோகன் சிங்குக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான விரிவான கொள்கையை அறிமுகப்படுத்தியதில் அவரது பங்களிப்புக்கு புகழாரம் சூட்டியும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு விழாக்களும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியும் நிறுவன நாள் விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்துள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, “அனைத்து போராட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். கட்சி நிகழ்ச்சிகள் ஜனவரி 3-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்” என்றார். இதையடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மன்மோகன் சிங் உடல் இன்று காலை 8.30 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு 9.30 மணி வரை தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.
டெல்லியில் யமுனை நதிக் கரையான நிகம்போத் காட் பகுதியில் சீக்கிய மத முறைப்படி இன்று காலை 11.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
தேசிய அளவில் 7 நாள் துக்கம்: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2025 ஜனவரி 1-ம் தேதி வரை தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையொட்டி, நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். வெளிநாட்டு தூதரகங்களிலும் தேசியக் கொடிகள் 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் ஜனவரி 1-ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.ஒரு வார காலத்துக்கு மாநில அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது. அரசு கட்டிடங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளம் உட்பட அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
மனதை விட்டு நீங்காத மன்மோகன் சிங்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிகச் சிறந்த அரசியல் தலைவர். மிகச் சிறந்த நிர்வாகி. நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரதமர் மோடி: சவாலான நேரத்தில், ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றினார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டுக்கு பொருளாதாரத்தில் ஒரு புதிய திசையை உருவாக்கிக் கொடுத்தார். முக்கியமான சந்தர்ப்பங்களில், சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வந்து ஒரு எம்.பி. யாக தனது கடமையைச் செய்தார். நேர்மையான மனிதராக, சிறந்த பொருளாதார நிபுணராக எப்போதும் மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி: ஞானம், எளிமை, நேர்மையான தலைவர், காங்கிரஸுக்கு கலங்கரை விளக்கமாக இருந்த மன்மோகன் சிங்கை இழந்துவிட்டோம். எனது நண்பராக, ஆலோசகராக, வழிகாட்டியாக விளங்கினார். அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பு.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: எனது வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரை மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: இந்தியாவை நேசிப்பவர்கள் மன்மோகன் சிங்கை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT