Published : 27 Dec 2024 07:07 PM
Last Updated : 27 Dec 2024 07:07 PM
மன்மோகன் சிங் (1932-2024): கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ஒன்றிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் (பாகிஸ்தான்) , காஹ் பகுதியில் மன்மோகன் சிங் பிறந்தார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது மன்மோகன் சிங்கின் குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. முதலில் உத்தரகண்டின் ஹல்துவானில் வசித்த அவர்கள் பின்னர் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.
பாகிஸ்தானில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மன்மோகன் சிங், இந்தியாவில் உயர் கல்வியை தொடர்ந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழங்களிலும் பயின்றார்.
கடந்த 1966 முதல் 1969 வரை ஐ.நா. சபையில் மன்மோகன் சிங் பணியாற்றினார். பின்னர் டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போதைய வெளிநாட்டு வணிக துறை அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ரா தனது அமைச்சரவையின் ஆலோசகராக மன்மோகன் சிங்கை நியமித்தார். ஒரு காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து மீண்டும் பேராசிரியர் பணிக்கு திரும்ப மன்மோகன் முடிவு செய்தார்.
இந்த விவகாரம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் செயலாளர் பி.என்.ஹஸ்கரின் கவனத்துக்கு சென்றது. மன்மோகனின் பொருளாதார அறிவை அறிந்திருந்த ஹஸ்கர், அவரை நிதித் துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமித்தார். இதன்பிறகு கடந்த 1982-85-ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1985-87 வரை திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் மன்மோகன் பதவி வகித்தார்.
கடந்த 1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் மத்திய நிதியமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். அப்போதுதான் பொருளாதார தாரளமயமாக்கலை அவர் அமல்படுத்தினார். இதன்மூலம் கூன் விழுந்திருந்திருந்த இந்திய பொருளாதாரம் நிமிர்ந்து எழுந்தது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். அப்போது அவர் சப்தமில்லாமல் பல்வேறு புரட்சிகளுக்கு வித்திட்டார்.
ஆதார் உதயம்: மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஆதார் அடையாள அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் ஆணி வேராக ஆதார் இருக்கிறது. அவரது ஆட்சிக் காலத்தில் நேரடி மானிய உதவி திட்டமும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.
நகரங்களுக்கு இணையாக கிராமங்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் மன்மோகன் சிங் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) அமல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் இதுவரை கோடிக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியதில் ஆர்டிஐ முக்கிய வகிக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை தவிர நிலம் கையகப்படுத்துதல் சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என பல்வேறு மகத்தான சாதனைகளை மன்மோகன் சிங் சப்தமில்லாமல் சாதித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம்: கடந்த 1974-ம் ஆண்டு இந்தியாவில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. இதன்காரணமாக இந்தியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் உடன் கடந்த 2005-ம் ஆண்டில் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது அரசுக்கு அளித்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றன. அப்போதைய சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே ஒப்பந்தத்தை கைவிட அறிவுறுத்தினார். ஆனால் மன்மோகன் சிங் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். பல்வேறு தடைகளை தாண்டி அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
பொருளாதார வளர்ச்சி: கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பணியாற்றினார். அப்போது தாராளமயமாக்கத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை அவர் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். எந்த தொழில் செய்தாலும் உரிமம் பெற வேண்டும் என்ற முறையை அவர் குறைத்தார். விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, தொழில் துறையில் அரசு தலையீட்டை குறைத்தார். இது தொழில்துறைக்கு உத்வேகம் அளித்தது.
மேலும் வர்த்தக சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். இறக்குமதி வரியை குறைத்து, திறந்தவெளி சந்தை பொருளாதாரத்தை ஏற்படுத்தினார். நாட்டின் முக்கிய துறைகளில் அவர் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தார். இதில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களால் நாடு தொடர்ந்து பலன் அடைந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோதும், அதை இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாதகமாக்கி ஏற்றுமதி திறனை ஊக்குவித்தார். வரியை எளிமையாக்க அவர் வரி சீர்திருத்தங்களை கொண்டு வந்து, வரி அமைப்பை விரிவுபடுத்தினார். இதனால் அவரது காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கியது. கடந்த 1991-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி அவர் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, “நான் கொண்டு வரும் சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்போது, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்” என நாடாளுமன்றத்தில் நம்பிக்கையுடன் அவர் கூறினார்.
நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற போது, நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியை கண்டது. அவரது முதல் ஆட்சியில் நாட்டின் ஆண்டு சராசரி வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருந்தது. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை நாட்டின் வளர்ச்சி வீதம் சுமார் 6.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
நிதி நெருக்கடியின்போது... கடந்த 2008-ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும், இந்திய பொருளாதாரத்தை குறைந்த பாதிப்புடன் அவர் கொண்டு சென்றார். தீவிரமான எதிர் சுழற்சி நடவடிக்கைகளை மன்மோகன் சிங் அரசு மேற்கொண்டது. இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கைகளை வெகுவாக தளர்ச்சி, உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்கான நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தையும் மன்மோகன் சிங்தான் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை உறுதி செய்ததால், இது கிராமப்புற மக்களின் ஏழ்மையை ஒழித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது.
மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் பல சிக்கல்கள் இருந்ததால், மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை கொண்டுவரப்பட்டு தற்போது வெற்றியடைந்துள்ளது. இதற்கு மன்மோகன் சிங் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட ஆதார் திட்டம்தான் அடிப்படையாக அமைந்தது. மக்கள் நலத்திட்டங்களில் ஆதார் மிக முக்கியமானதாக மாறியது.
இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திலும் மன்மோகன் சிங் முக்கிய பங்காற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது அணு சக்தி பற்றி பேசிய மன்மோகன் சிங், “சிவில் அணுசக்தி நடவடிக்கை நாட்டுக்கும், உலகத்துக்கும் நல்லது. நிலையான வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பை நோக்கி நாம் செல்லும்போது, ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு அணு சக்தியை பயன்படுத்துவதுதான் சிறந்தது” என்றார்.
நாட்டின் நிதியமைச்சராகவும், பிரதமராகவும், மன்மோகன் சிங் பணியாற்றிய காலம், இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது . அவரது தொலைநோக்கு கொள்கைகள் நவீன இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT