Published : 27 Dec 2024 06:46 PM
Last Updated : 27 Dec 2024 06:46 PM
புதுடெல்லி: அன்று சோனியா காந்திக்கு கிளம்பிய எதிர்ப்பால் பிரதமரானார் மன்மோகன் சிங். அவருக்கு கிடைத்த இரண்டு முக்கியப் பதவிகளின் பின்னணியும் மிக ஆச்சரியத்துக்கு உரியதாக கருதப்படுகிறது.
கடந்த 1991-ல் பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பதவியில் அமர்ந்தார். அப்போது அவருக்கு ஒரு திறமையான நிதி அமைச்சர் தேவைப்பட்டது. இதன் பின்னணியில் பிரதமராவதற்கு இரு தினங்கள் முன்பாக கேபினட் செயலாளரான நரேஷ் சந்திரா, நரசிம்மராவுக்கு எழுதிய கடிதம் இருந்தது. அந்த 8 பக்கக் கடிதத்தில் அவர், நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.மத்திய அமைச்சரவையில் கல்வி, வெளியுறவு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை நரசிம்மராவ் வகித்துள்ளார். ஆனால், அவருக்கு நிதி அமைச்சகத்தில் அனுபவம் இல்லை. இதனால், பிரதமர் நரசிம்மராவின் ஆலோசகரான பி.சி.அலெக்ஸாண்டர், பேராசிரியர் மன்மோகன் சிங்கின் பெயரை பரிந்துரைத்தார். இதற்கு முன்பாக அவர் குஜராத்தின் ஐ.ஜி.பட்டேலையும் பரிந்துரைத்திருந்தார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் இயக்குநராகவும் பணியாற்றியவர் ஐ.ஜி.பட்டேல். அவர் தனது உடல்நலம் குன்றிய தாயை வதோராவில் கவனித்து வந்தார். இதனால், அமைச்சர் பதவி குறித்து ஆலோசிக்க வந்த அழைப்பில், தம்மால் டெல்லிக்கு வர முடியாத நிலையை பட்டேல் விளக்கி கூறினார். இதன் காரணமாக, மத்திய நிதி அமைச்சராகும் வாய்ப்பு மன்மோகன் சிங்குக்கு கிடைத்தது. புதிய பிரதமராக பி.வி.நரசிம்மராவ் பதவி ஏற்ற ஓரிரு நாள் முன்பாக மன்மோகன் சிங் வெளிநாட்டிலிருந்து திரும்பி இருந்தார்.
பயணக் களைப்பால் அவர் தாம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில், மத்திய நிதி அமைச்சருக்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. அது பேராசிரியரான மன்மோகனுக்கு பெரும் வியப்பைத் தந்தது. அன்று முதல் மன்மோகனின் அரசியல் வாழ்க்கையும் துவங்கியது. முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எம்.பி. ஆனார் மன்மோகன். ஆறு முறை தொடர்ந்த அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி, கடந்த ஏப்ரல் 13-ல் முடிவுக்கு வந்தது. அன்று முதல் ஓய்வில் இருந்தவர் தனது 92-வது வயதில் காலமானார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி பிரதமராக மறுத்ததால் மன்மோகனுக்கு அப்பதவி கிடைத்தது. 2004 மக்களவைத் தேர்தல், பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது . அந்த வருடம் மே 13-ல் வெளியான மக்களவைத் தேர்தலின் முடிவுகள், முதன்முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு (யுபிஏ) கிடைத்தது.
ஆனால், யுபிஏ-வின் ஆட்சியில் யார் பிரதமராவது ? எனும் கேள்வி எழுந்தது. சோனியா காந்திக்கு, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் முழு ஆதரவளித்தனர். பிரதமர் பதவியில் சோனியா அமர்வார் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதற்குள் அவர் வெளிநாட்டவர் என்ற விவகாரம் கிளம்பி எதிர்ப்பும் நிலவியது. கொந்தளிப்பான அரசியல் சூழலில் 2004 , மே 18-ல் நாடாளுமன்ற கட்டிடத்தில் காங்கிரஸ் தலைவர்களும், அதன் புதிய எம்.பி.க்களும் கூடியிருந்தனர்.
தாம் பிரதமராகும் முடிவை சோனியா அங்கு வந்த அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. அப்போது தன் மகன் ராகுல், மகள் பிரியங்காவுடன் அங்கு வந்தார் சோனியா. அவரது முகத்தில் காணப்பட்ட ஒருவித இறுக்கம், வெளியாக இருப்பது நல்ல செய்தி இல்லை என்பதை உணர்த்தியது. புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு மேடை ஏறிப் பேசத் துவங்கினார் சோனியா.
அப்போது தனது முடிவு குறித்து சோனியா கூறுகையில், ‘கடந்த ஆறு வருடங்களாக நான் அரசியலில் உள்ளேன். பிரதமராவது எனது குறிக்கோள் அல்ல என்பதைத் தொடர்ந்து கூறிவந்தேன். இன்றைக்கு நான் இருக்கும் நிலைமைக்கு எப்போதாவது வந்தால், என் மனசாட்சியின் குரலுக்கு மட்டுமே செவிசாய்ப்பேன் என்று நினைத்தேன். இன்று அந்த குரல் எனக்கு நான் பிரதமர் பதவியை ஏற்க கூடாது என மனிதநேயத்துடன் குறிப்பிடுகிறது.’ எனத் தெரிவித்தார்.
அதிருப்தி குரல்கள்: இதைக் கேட்டு சுமார் இரண்டு மணி நேரம் அங்கு அதிருப்தி குரல்கள் எழுந்தன. இக்குரல் ஓசைகளை அடக்கிய சோனியா கடைசிவரை தனது முடிவிலிருந்து மாறவில்லை. எனவே, காந்தி குடும்பத்துக்கு வெளியிலிருந்து ஒருவரை பிரதமராக்க கூட்டணி கட்சிகளும் சம்மதித்தனர். பிறகு பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில், மன்மோகனுக்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து, அவரைப் பிரதமர் பதவியில் அமர்த்தினர்.
நூல்களின் குறிப்புகள்: நாட்டின் 14-வது பிரதமரான மன்மோகன் 2004 முதல் 2014 வரை தொடர்ந்து இரண்டு முறை அப்பதவியை வகித்தார். அதேநேரம், ‘பதவி மன்மோகனுக்கு அதிகாரம் சோனியாவுக்கு’ எனும் சர்ச்சையும் தொடர்ந்தது. எனினும், பிரதமராக பதவி ஏற்காதது சோனியாவின் இயலாமையா? அல்லது அவர் செய்த தியாகமா? என்ற சர்ச்சைகளும் அதன் பிறகு வெளியான பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை எழுதியவர்களின் பட்டியலில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த காங்கிரஸ் தலைவர் நட்வர்சிங், பிரதமர் மன்மோகனின் ஊடக ஆலோசகரான சஞய் பாரூ மற்றும் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT